ஒரு காகம் இலாவகமாக பறந்து வந்து அந்த நாவல் மரத்தின் இடப்பக்கக் கிளையில் அமர்ந்ததை ஜன்னல் வழியாகக் கண்டேன்.
சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தில் நேரம் சரியாக 6.00 மணி காட்டியது.
குளிரான காலைப் பொழுது. நான் படுத்திருந்த அறையில் எந்த மாற்றமும் இல்லை. அதே மஞ்சள் நிற சுவர்கள், கூரையில் சுற்றும் வெள்ளை நிற மின்விசிறி, மரக்கட்டில், கட்டிலில் அதே நான்...
விடிந்துவிட்டது. அலுவலுக்குச் செல்ல வேண்டும். செல்லாமல் வீட்டிலேயே இருக்க முடியாது. நேரத்தை விரயம் செய்வது தவறு. ஏனென்றால் இன்று, இப்பொழுது மட்டுமே உண்மை. சரிதான், நாளை என்பது சோம்பேரிகளின் சொர்க்கம், இன்று மட்டுமே உழைப்பாளர்கள் மார்க்கம் என நான் மோட்டிவேஷனல் க்வோட் சொல்ல வருவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், என் நிலைமை அப்படியல்ல, இன்று மட்டுமே உண்மை, இன்றின்றி நானில்லை. இதையெல்லாம் ஏன் உங்களிடம் சொல்கிறேன்? சொல்கிறேன்.
கிளம்பி, வீட்டைப் பூட்டிவிட்டு வீதியில் நடந்தேன்.
கிளம்பி, வீட்டைப் பூட்டிவிட்டு வீதியில் நடந்தேன்.
வீதி. இந்த இடம் எனக்கு அத்துப்படி. எத்தனை முறை பார்த்தாலும் இந்த இடம் மாறுவதில்லை. மாறாது. மாறினால் மிகவும் சந்தோசப்படக்கூடிய ஆள் நான்தான். உதாரணத்திற்கு, வீட்டுப் பக்கம் உள்ள நாவல் மரத்தில் ஒரு காகம் வந்து உட்கார்ந்ததே? அதற்கு அதுதான் உறைவிடம். அங்கு அதற்கொரு கூடும் உண்டு. இன்றும் அது அங்குதான் இருக்கும். நாளையும் அங்குதான். நாளை மறுநாளும்.
இதுமாதிரி ஒரு விஷயத்தை அறுதியிட்டு இது இப்படித்தான் இருக்கும், இது நடக்கும், இது நடக்காது, என்று கூறுவதால் சிலர் என்னை மண்டைக் கணம் பிடித்தவன் என நினைப்பதுண்டு. அதாவது அவர்கள் நினைப்பதாய் நான் நினைப்பதுண்டு. இல்லையில்லை, நிச்சயம் நினைக்கிறார்கள். நினைத்துக்கொண்டே இருக்கிறார்கள். சிலர், நான் இது இப்படித்தான் நடக்கப் போவது எனக் கூறுவதைக் கேட்டு ஏளனம் செய்வதுண்டு. ஆனால் அது அவ்வாறே கணக்கட்சிதத் துல்லியத்தோடு நடப்பதைப் பார்த்து, நான் ஏதோ மந்திரக்காரன் எனக் கூறுபவர்களும் உண்டு. இப்படி என் கால இடக் கணிப்புக் கட்சித மகாசக்தியைப் பார்த்து அசந்துபோய் எனக்கு நானே மாயாவினோத மேன் என மார்வல் காமிக்ஸ் பாணியில் பெயர் சூட்டிக்கொண்டுவிட்டேன். உங்களுக்கு மட்டும்தான் இதை சொல்கிறேன், வேறு யாரிடமும் இதை சொல்ல வேண்டாம்.
இ.எஸ்.பி. என்று இங்க்லீஷில் ஒன்று கூறுவார்கள் – இ.எஸ்.பி. விரிந்தால் - எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன். அதாவது சராசரியாக நம் ஆறறிவிற்கும் மனித ஆற்றலுக்கும் அப்பாற்பட்டு ஏதாவது குணங்கள் மனிதரிடையே தென்பட்டால், அவர்களை எக்ஸ்-மேன் ரேஞ்சிற்கு பில்ட் அப் (உட்டாலக்கடி) குடுத்து, அவர்களை வைத்து தொற்றுக் காணொளிகள் (viral videos) செய்து பணம்பண்ண நிறைய பேர் திரிவதுண்டு. அப்படிப்பட்ட இ.எஸ்.பி ஆஸம் ஆசாமிகளில் நானும் ஒருவன் என நீங்கள் நினைக்கலாம், நினைக்க நிறைய வாய்ப்புண்டு. அப்படியானால் எனக்கு அசாதாரண ஆற்றல்கள் உள்ளனவா? அதைத்தான் சொல்லப்போகிறேன்...
உண்மையிலேயே எனக்கு காலத்தைக் கணிக்கும் ஆற்றல் உண்டா எனக்கேட்டால், அது சார்பு ரீதியாக சரியென்பேன். ஆனால், என்னுடைய மிகப்பெரிய சக்தியாக நான் நினைப்பது ஒன்றுதான். என்னுடைய சகிப்புத்தன்மை. சலிப்பில்லாமல் ஒரு காரியத்தை மீண்டும் மீண்டும் செய்வது, மீண்டும் மீண்டும் என்றால் மீண்டும் மீண்டும். இதை சக்தி என்று சொல்வதைவிட ஒருவிதக் காலத்தின் கட்டாயம் எனக் கொள்ளலாம். நான் வாழ இந்த சலிப்பற்றத் தன்மை இன்றியமையாதது.
இது நிற்க...
இரயிலைப் பிடித்து அலுவலகம் வந்தடைந்தேன். ஹ... அதே ஆஃபீஸ். அதே வேலை. என்னுடைய அலுவலகத்திலேயே திறமையான வேலையாள் நான்தான். ஏனென்றால் என்னிடம்தான் அற்புத சக்தி உள்ளதே!
கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே வேலை செய்தேன், இந்த நாள் எப்போது முடியுமென்று.
அன்று இந்தியா ஆஸ்திரேலியாவிற்கிடையில் கிரிக்கெட் ஆட்டம் நடந்தது . இந்தியா படு மோசமாக ஆடிக் கொண்டிருந்தது. இப்படியே போனால் தோல்விதான். காஃபிடீரியாவில் இருந்த தொலைக்காட்சி முன் எல்லோரும் சோகமாக மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
நடுவில் புகுந்து, “இந்தியா இன்று ஜெயிக்கிறது” எனக் கத்தினேன்.
எல்லோரும் என் பக்கம் திரும்பி, என்னை வியப்புடன் பார்த்தனர். இன்னும் 40 ரன்கள் வேண்டும், 2 ஓவர்கள்தான், இரண்டு விக்கெட் மட்டுமே கையில் உண்டு. சிலர் என்னைப் பார்த்து சிரித்தனர். சிலர் பாவமாகப் பார்த்தனர்.
அடப்போயா, டசன் பால்ல 40 ரன் எப்டி அடிப்பான்?” என்றார் சொட்டை சேஷு.
“இந்த ஓவர்ல 12 ரன் போப்போது”, என்றேன். “இந்தியா இன்று ஜெயிக்கிறது, 1000 ருபாய் பந்தயம்”.
இப்போது சேஷு நெற்றியில் அடித்துக்கொண்டு , “நீ என்ன லூசா?” என சிரித்தார்.
நாலு பந்து சுற்றினான், ரன்கள் சேர்க்கவில்லை
.
“பந்தயத்துக்கு நான் தயார்”, என இந்தியா தோல்வியுற வேண்டுமென்று, சேஷு ஆர்வமானார்.
“கண்டிப்பா பெட் பண்றீங்களா சேஷு?” என சிரித்தேன்.
“நான் சொன்னா வாக்கு மாறமாட்டேன். இன்னக்கி ஆயிரம் எனக்கு இலாபம்.” என்றார்.
பேட்ஸ்மேன் சுற்றிய வேகத்தில் மட்டையில் பட்டு ஐந்தாவது பந்தில் சிக்சர் போனது.
சேஷுவைப் பார்த்து சிரித்தேன்.
“ஏதோ ஃப்ளூக். இன்னும் 34 ரன் அடிக்கணும் தம்பி”.
நோ பாலில், ஒரு ரன் ஓடி, கடைசி பந்து பவுண்டரிக்கு சீறிப் பாய்ந்தது. 49வது ஓவரில் 12 ரன். இப்போது சேஷு கர்ச்சீப்பால் முகத்தை துடைத்துக்கொள்வது சிரிப்பாக இருந்தது.
இப்போது, லாங் ஆனில் 4 என்றேன். 4 போனது. காபிடீரியாவே கலகலத்தது, சேஷைத்தவிர.
தொடர்ந்து மூன்று சிக்சர்கள். கடைசி இரு பந்துகளில், ஆறு தேவை. விக்கெட் விழுந்தது. திடீரென ஒரே நிசப்தம்.
“கவலைப்படாதீங்க மக்களே! கடைசி பால் சிக்ஸ் அடிக்கிறான்” என்றேன்.
டீப் மிட் விக்கெட் பவுண்டரியை காவல் காத்துக்கொண்டிருந்த ஃபீல்டரின் கையில் பட்டு எகிறி பந்து சிக்சருக்கு சென்றது. இந்தியா வெற்றி. வெற்றியைக் கொண்டாடுவதை மறந்துவிட்டு எல்லோரும் என்னை வேற்று கிரக மனிதனைப் போல் பார்த்தனர்.
"அன்பிலீவபில். வாட் ஏ மெக்னிஃபிசன்ட் கேம் ஆஃப் கிரிக்கெட் வி ஹேவ் சீன் டுடே..." - இது முன்னால் இருந்து டிவி-யில் கமன்டேட்டர்.
“அடப்பாவி, எப்பிடிடா? இந்தியா ஜெயிச்சத நம்புறதா, இல்ல நீ கெஸ் பண்ணத நம்பறதாண்ணே தெரியலையே! எதோ மாய மந்திரம் மாறில்ல இருக்கு”, என சேஷு நழுவினார்.
“1000 ரூபாய் சேஷு...”
“அட மாசக் கடைசிய்யா! சம்பளம் வந்தன்னையும் தர்றேன். கடைசி ஓவர்ல ஸ்பின்னர் போட்டுட்டான். அதான் இந்தியா ஜெயிச்சிட்டான்.” எனத் தன் காபினை நோக்கி ஓடியே விட்டார்.
முடிவாக அலுவல் நேரம் முடிந்தது.
இரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள பெட்டிக்கடையில் ஒரு பலூன் வாங்கிக்கொண்டேன்.
பொதுவாக இரயில் நிலையத்தில் இந்நேரத்திற்கு வரப்போகும் இரயில் மிகக் கூட்டமாக இருக்கும். கண்டிப்பாக கூட்டமாகத்தான் இருக்கும். சரியாக அந்த இரயிலும் 6.30-ற்குத்தான் வரும். அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்தேன். பக்கத்தில் அவள். ஸ்வேதா.
ஸ்வேதா - அவளைப் பார்த்ததும் எனக்குப் பழைய ஞாபங்கள் வந்து கண்கள் நனைந்தன. பழைய ஞாபகம் என்றால் அதாவது புதிய ஞாபகம். புதுசு என்றால் இனி நடக்கப்போகிற... ஷ்ஷ்ஷ்... கொஞ்சம் குழப்பம்தான். ஆனால் எனக்குதான் எதையும் முன்கூட்டியே அறியும் சக்தி உள்ளதே, எனவே இது எனக்குப் புதிதல்ல.
அவள் பெயர் மட்டுமல்ல, அவளைப்பற்றி நிறைய சங்கதிகள் எனக்குத் தெரியும். இதை என் சக்தியைக்கொண்டு, அதாவது நிறைய நேரத்தை செலவு செய்து தெரிந்துகொண்டேன். ஆனால், அவளுக்கு என்னைத் தெரியாது. தெரிந்ததுண்டு, இன்று தெரியாது. குழப்பமடையவேண்டாம், விடியும் முன் உங்களுக்குப் புரிந்துவிடும்.
தன்னுடைய ஃபோனைப் பார்ப்பது, இரயில் வரும் திசையைப் பார்ப்பது. ஏமாற்றமடைவது என ஸ்வேதா இருந்தாள்.
“அஹ்ம், எத்தனை முறை கடிகாரத்தைப் பார்த்தாலும் 6.30-ற்குத்தான் வண்டி வரும்” என்றேன்.
திடீரென நான் பேசியதைக் கேட்டுத் திடுக்கிட்டு, என் குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினாள். அந்நியர் ஒருவர் தன்னிடம் பேசியதுகண்டு கண்ணியமாய்ப் புன்னகைத்தாள், பெண்ணிய எச்சரிக்கை உணர்வோடு.
பிறகு சில வினாடிகளை மௌனம் உண்டது. இரயில் வரப்போகும் நேரமானது.
நான் முன்கூட்டியே சொன்னபடி, இரயில் நல்ல கூட்டம். வெளியே வரப்போகும் பயணிகளின் எண்ணிக்கையை விட உள்ளே செல்ல பலரும் எத்தனித்தனர். இரயில் பழைய பிரயாணிகளை பிரசவிக்க, புதுப் பிரயாணிகள் இரயிலைக் கர்ப்பித்தனர். இந்தக கூட்டத்தில் எப்படிச்செல்வது எனத்தெரியாமல் ஸ்வேதா தவித்துக்கொண்டிருந்தாள்.
“அடுத்த இரயிலில் செல்லலாமே! இன்னும் 5 நிமிடத்தில் வந்துவிடும். கூட்டம் கூட குறைச்சலாக இருக்கும்.” என்றேன்.
“ஆனால் அடுத்த இரயில் வர சராசரியாக எப்போதும் 20 நிமிடங்கள் ஆகுமே! நான் இதிலேயே எப்படியோ போய்க்கொள்கிறேன். நன்றி.” எனக் கிளம்பினாள்.
முன் பின் தெரியாத நான் அவளிடம் பேச்சு குடுப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை போலும்.
கூட்டமான இரயிலில் ஏற முற்பட்டாள். நான் இருக்கையில் அமர்ந்தவாறே, “அடுத்த இரயில் நிச்சயமாக 5 நிமிடத்தில் வந்துடும், கூட்டம் கூட கம்மியாக. என்னை நம்பலாம் ஸ்வேதா”, என்றேன். 'ஸ்வேதா' என அவள் பெயரை சற்று உரக்கவே சொன்னேன்!
கூட்டத்தில் கரையச்சென்றவள் உள்ளே செல்லாமல் திரும்பி என்னைத் திகிலோடு பார்த்தாள். அவள் இரயிலில் ஏறவில்லை. நீள்வண்டி புறப்பட்டது.
என் பக்கம் வந்து, “என் பேரு உங்களுக்கு எப்படித்தெரியும்?” எனக் கேட்டாள்.
இதுதான் மிகவும் சுவாரஸ்யமான பகுதி.
புன்னகைத்தேன்.
“எனக்கா? அதாவது உங்க பேர் எப்படித்தெரிந்ததுன்னா கேட்டீங்க? ம்ம்ம்... நீங்க நான்கு நிமிடம், அதாவது 240 நொடிகள் தந்தால், அடுத்த வண்டி வருவதற்குள் சொல்லிட்றேன். பயப்பட அவசியமில்லை, உட்காரலாமே?”
“உங்களைப் பார்த்தால்... இதற்கு முன் நாம் சந்திச்சிருக்கமா?. ஏற்கனவே உங்களைப் பார்த்தது போலவே இருக்கு.” என்றாள்.
“ஹா ஹா ஹா ஹா.”
“ஏன் சிரிக்கிறீர்கள்?”
“பொதுவாக இது ஆண்கள் கூறும் பிக் அப் லைன். ஒரு பெண் கூறுவது, விந்தையா இருக்கு.”
“ஹ, சரி. இல்லை நீங்கள் தினமும் இந்த ஸ்டேஷனில்தான் வந்து ஏறுறீங்கன்னு நினைக்கிறேன். அப்போது பார்த்திருப்பேனோ என்னவோ?”
“நிச்சயமாக பார்த்திருப்பீங்க. பார்த்திருந்தாலும் என்னை எவரும் ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை. அது என் சிறப்பு.”
ரெயில்வே டிஜிட்டல் கடிகாரத்தில் மணி 6.31.
“நீங்கள் பேசுவது, எனக்கு விநோதமாகவுள்ளது. அதே கேள்விதான். இருந்தாலும், என் பேர் எப்படி உங்களுக்குத் தெரியும்?”
“ஹ்ம்ம். அதாவது... எனக்கொரு சக்தியுண்டு”.
“சக்தியா”, நான் சுயநினைவோடுதான் இருக்கிறேனா என்பதுபோல் பார்த்தாள்.
“ஆம் சக்திதான். நான் கிட்டத்தட்ட ஒரு கடவுள் என வைத்துக்கொள்ளலாமே!”
“அடுத்த இரயில் வருவதற்குள் உங்க கதையை சொல்லுவீர்களா மிஸ்டர் கடவுள்?”
கண்ணை மூடி நீண்ட பெருமூச்செறிந்தேன். அவள் பக்கம் திரும்பி, “என் கை மேல் உங்கள் கையை வைக்கமுடியுமா?”
“வாட்?”
“பயப்பட வேண்டாம். ஐ ஹேவ் நோ ஈவில் இன்டன்ஷென்ஸ்!”
சற்றுத் தயங்கி என் வலக்கை மேல் தன் இடக்கையை வைத்தாள்.
“என்னுடைய சக்தியைப் பற்றி சொல்லமுடியுமா தெரியவில்லை. ஆனால், காண்பிக்கிறேன். நான் சொல்வதை கூர்ந்து கவனிங்க.
“நம் எதிர் பிளாட்பார்மில் மஞ்சள் சட்டை போட்டுள்ள அந்தப் பெண் இப்போது எழுந்து வந்து, இரயில் வருகிறதா எனப்பார்ப்பாள்? பார்க்கிறாளா?”
“ஆம்... அட இதுதான் உங்க சக்தியா? எல்லோரும் தான் நடை மேடையில் வந்து இரயில் வருதான்னு பார்க்குறாங்க.” என்றாள்.
மெல்லியப் புன்னகையோடு, “அவ்வளவு சுலபமாய் என்னைக் கணிக்க வேண்டாம். இப்போது வெள்ளை சட்டை அணிந்த நபர் ஒருவர் நம்மிடம் வந்து இரயில் எப்போது வரும் எனக் கேட்பாரு பாருங்க?”
நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் பின் பக்கம் ஒருவர் வந்து நின்று, “சார், இரயில் எப்போ வரும்? எனக்கேட்டார் – வெள்ளை சட்டை. “இன்னும் மூன்று நிமிஷத்துல வரும் சார்.” என்றேன்.
நன்றி என்ற செய்கையோடு எங்களைக் கடந்து சென்றார்.
இப்போது அவளுக்குக் கொஞ்சம் திகிலாய் இருந்திருக்க வேண்டும்.
“இது... இதெப்படி...”
“ஷ்ஷ்ஷ். அதோ விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை கையிலுள்ள பலூன் இப்போ வெடிக்கப் போகிறது.”
‘டப்’ என சத்தம் கேட்டது. பலூன் வெடித்த சோகத்தில் குழந்தை அழுதது.
என் சட்டைப்பையில் இருந்து ஒரு சிவப்பு நிற பலூனை எடுத்து ஊதினேன்.
“எப்.. எப்படி?” எனக் கேட்டாள்.
பலூனை ஊதிக்கொண்டே ‘ஒரு நிமிடம்’ என்பது போல் ஒரு விரலால் அவளுக்கு சைகை காட்டினேன்.
“ஒரு பன்னிரண்டு நொடி’ எனக் கூறிவிட்டு, அந்த இருக்கையிலிருந்து எழுந்து ஓடிச்சென்று நான் ஊதிய பலூனை அந்தக் குழந்தையிடம் குடுத்துவிட்டு ஓடிவந்து நான் இருந்த இடத்தில் அமர்ந்து மீண்டும் அவள் கையைப் பற்றினேன். ஓடி வந்ததில் மூச்சு வாங்கியது.
குழந்தை என்னைப் பார்த்து சிரித்தது.
“இங்க என்ன நடக்குது?”
மிகவும் கூர்மையான விழிப்புணர்வோடு இருக்கும் முகபாவத்தோடு அவளைப் பார்த்து, “ஷ்ஷ்ஷ்... மனிதன் ஒரு முப்பரிமான விலங்கு. அவனால முன்னும் பின்னும், மேலும் கீழும், பக்கவாட்டிலும் செல்ல முடியும். ஆனால் காலம் எனும் நான்காம் பரிமாணத்தில் முன்ன மட்டும் தான் செல்ல முடியும். பின்ன செல்ல முடியாது. இன்று வரை மனிதனால் கால இயந்திரம் கண்டுபிடிக்கப்படாததற்கு இதுதான் காரணம் தெரியுமா?.”
“விளங்கவில்லை.”
“ஹா ஹா ஹா. எல்லாமே விளங்கவேண்டுமென்ற அவசியமில்லை.” அவள் பேந்த பேந்த விழித்தது பார்க்க சிரிப்பாய் இருந்தது.
“நீங்கள் சொல்வதெல்லாம் குழப்பமாக உள்ளது. ஆனா உங்கள பார்த்தா நன்றாக பழகியவர் போன்றும், இங்கு நடப்பதெல்லாம் முன்பே நடந்தவை போன்றும் இருக்கு. அது என்ன சொல்வாங்க? ‘தேஜா வு’ போல!”
சத்தமாக சிரித்தேன். “ஹா ஹா ஹா ஹா ஹா. தேஜா வூ? தேஜ்.. ஹா ஹா ஹா. தேஜா வூ பற்றி பேசவேண்டாம். விட்டு விடுவோமே...” என சொல்லிக்கொண்டே கடிகாரத்தைப் பார்த்தேன். “ஆங்... ஸ்வேதா... ஏழு, ஆறு, ஐந்து...”
“எதற்கு கவுண்ட் டவுன் குடுக்குறீங்க?”
“மூன்று, இரண்டு, இரயில் வரப்போகிறது...”
நடை மேடைக்குள் இரயில் வரும் சத்தம் கேட்டது, மணி 6.35.
“நான் சொன்னது போல் இரயில் வந்ததா?”
“இதென்ன கனவா? நம்பமுடியலையே!. நீங்கள் யார்?”
“கணவில்லை. கண்டிப்பா நான் சொல்வதெல்லாம் உண்மை."
இரயில் வந்து நின்றது.
“எனக்கு மிகவும் திகைப்பாகவும், குழப்பமாகவும் உள்ளது. நீங்க யார்? நான் இரயிலில் ஏறனும். நீங்க வரவில்லையா?”
“நான் இரயில் ஏற வரவில்லை.”
“அப்போ நான் போகட்டுமா? உங்களை நாளை சந்திக்கிறேன். இதே இடத்தில். எனக்கு நேரமாகிறது.”
அவள் செல்லப் போகிறாள் என்பது எனக்கு சோகமாக இருந்தது. “நாளையா?”, இன்னும் அவள் கையைப் பிடித்துக்கொண்டுதான் இருந்தேன்.
“நான், நான் செல்ல வேண்டும்”, என்றாள்.
அவள் கையை நான் விடவில்லை. விட்டால் சென்றுவிடுவாளே!
அவள் கையை அழுத்தி, “சென்று விடாதே, என்னைக் காப்பாற்று!" என்றேன்.
"வாட் ஆர் யு பிலாப்பரிங். என் கைய விடுங்க!", என உரக்கச் சொன்னாள்.
அந்த சத்தத்தைக் கேட்டு நடை மேடையில் நின்ற பலரும் எங்களைப் பார்த்தனர்.
"நான் ஒரு கைதி. என்னைக் காப்பாற்று. ஸ்வேதா, என்ன விட்டுட்டு போகாதே!”, என உணர்ச்சிவயப்பட்டுக் கதறி அழுதேன்.
அவளுக்கு நான் சொல்வதும், ஏன் அழுகிறேன் என்பதும் புரிந்திருக்காது. புரிய வாய்ப்பில்லை. கண்களை விரித்து என்னை ஒருவித பயத்தோடும், வியப்போடும், பரிதாபத்தோடும் அவள் பார்த்த அந்தப் பார்வை என்னுடைய இருதயத்தை ஊசியைப் போல ஊடுருவியது. என்னையறியாமலே என் கைப்பிடி அவள் கையை விட்டு மெல்ல மெல்ல நழுவியது. எனைச் சுற்றிலும் கரும் மேகங்கள் போல சூழ்ந்து அவளுக்கு எனக்கும் ஒரு திரை உருவாகி அவள் முகம் மெல்ல மெல்ல மறைய, அவள் கைமேல் இருந்த என் கைப்பிடியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தேன்.
தவறு செய்துவிட்டேன். நான் ஒரு கைதி என்று யாரிடமும் சொல்லக்கூடாது. அதுதான் சட்டம். மீண்டும் தொடக்கத்திற்கே செல்லப்போகிறேன். இது எனக்கு சற்றும் பிடிக்காதவொன்று. ஓட்டப்பந்தயம் முடியும் வேளையில், இறுதிக்கோடு காணாமல்போய், மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்தால் உங்களுக்குப் பிடிக்குமா? அதுபோலத்தான் இதுவும். கோபமும், பயமும் கலந்து ஒருவித இம்சையாய் இருந்தது. யாரோ நெஞ்சில் கைவைத்து தண்ணீருக்குள் தள்ளுவது போல இருந்தது, ஆழமாக, மிக ஆழமாக. இருட்டாக இருந்தது.
நான் ஏன் அங்கு, அப்படி நடந்துகொண்டேன்? உண்மையை சொல்லப்போனால் நான் ஒரு குற்றவாளி. கைதி. உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்த உலகத்தில் கைதிகளுக்குத் என்ன தண்டனை என்று?
"நேரச் சிறை!"
ஆம். சிமுலேஷன், அதாவது மெய் நிகர் அமைப்பிற்குள் ஒரு மனிதனின் சிந்தையைக் கவர்ந்து, அவன் நினைவுகளை ஒரு குறிப்பிட்ட கால நேரத்திற்குள் சிறை வைத்துவிடுவார்கள். சின்ன முப்பரிமான சிறையைப் போல, நான் இருப்பது ஒரு நான்கு பரிமாண நேரச் சிறை. என்ன குற்றம் செய்தேன், எதற்காக இந்த நேரச் சிறைக்குள்ளே இருக்கிறேன் என்பது உங்களுக்குத் தேவையில்லாத விஷயம். அதைப்பற்றி சொல்ல எனக்கு இப்போதைக்கு தைரியமில்லை.
பார்க்கப்போனால் ஒரு வகையில் தினமும் செய்த வேலையையே மீண்டும் மீண்டும் செய்து செத்து மடியும் கூட்டம் தானே நம்மில் பலர்! இப்படி நாம் செய்த ஒன்றைத்தான் மீண்டும் மீண்டும் செய்கிறோம் என்பதே நமக்குத் தெரிவதில்லை. இருந்தாலும், நான் அப்படியல்ல என்பது குறைந்தபட்ச நிம்மதி.
என்னைச்சுற்றி நெருக்கிய கரும் மேகக்கூட்டம் விலகி இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது.
வெளிச்சம் கண்களைக் கூசி எழுப்பியபோது, என்னுடைய படுக்கை அறையில் இருந்தேன்.
சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தில் நேரம் சரியாக 6.00 மணி காட்டியது.
ஒரு காகம் லாவகமாக பறந்து வந்து அந்த நாவல் மரத்தின் இடப்பக்கக் கிளையில் அமர்ந்ததை ஜன்னல் வழியாகக் கண்டேன்.