Saturday, 14 May 2016

விளையாட்டு

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கவேண்டும்?

காலையில் எழும்போது தூக்கக்கலக்கத்தில் சுவற்றில் முட்டி, அதானால் வந்த கோபத்தில் ஆத்திரமாக பல்தேய்க்கப்போய், பிரஷ் ஈறில் மோதி, இதனால் மேலும் ஆத்திரம் அடைந்து காலை சுவரின்மேல் உதைத்துத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என நிரூபித்து... ச்சே.

வாசலில் பாலும் வரவில்லை, பேப்பரும் வரவில்லை. ஆத்திரமாக உள்ளே சென்று கடிகாரத்தைப் பார்த்தேன், மணி 7.00. காலையில் முதலில் சுவரைப் பார்க்கும்போதும் 7 ஆகத்தான் இருந்தது. பாட்டரியின் சாவு. 

அவசரமாக  செல்போனை எடுத்துப் பார்த்ததில், ஹாங்காகித் தொலைத்தது அந்த கம்மி RAM சனியன். ஐநூற்றி அறுவத்து ஆறு முறை ஸ்க்ரீனை தேய்த்து, ‘உன்னால் முடியும்என ஊக்கமளித்தும் வேலை செய்யாததால் அதன் பிறப்பைப்பற்றி கெட்ட வார்த்தைகளால் திட்டியதும் ரோசம் வந்து 7.50.. காட்டி 'வேலைக்கு சரியான நேரத்திற்கு முடிந்தால் போ பார்க்கலாம்' என நக்கலியது. 

இரயிலை நேரத்தில் பிடிக்க குளிக்கவேண்டிய அவசியமில்லை என்பதால் அவசரமாக பேன்ட் சர்ட் அணிந்துகொண்டு ஸ்டேஷனுக்கு ஓடினேன். இரயில் சரியான நேரத்திற்கு வந்து சென்றது சற்று அமானுஷ்யமாய் இருந்தது. 

அடுத்த இரயில் வர இன்னும் 10 நிமிடங்கள் ஆகும். 10 நிமிடங்களுக்குள்
சுமார் 2500 குழந்தைகள் பிறக்கின்றன, 3600 முறை பூமியை மின்னல் தாக்குகிறது, 1160 பேர் திருமணம் செய்துகொள்கின்றனர், இதையெல்லாம்விட முக்கியம், 10 நிமிடம் தாமதித்தால் சிடுமூஞ்சி சொட்டை பாஸ் ஆஃபீசுக்கு எனக்குமுன்னே வந்துவிடுவார் என்பது பயங்கரமான ஒரு புள்ளிவிவரம்.

ஆடி அசைந்து வந்த இரயிலில் முந்திக்கொண்டு சீட் பிடிக்க அனைவரும் ஓட, பச்சை சட்டை ஒருவர் லாவகமாக தன் கைக்குட்டையை ஜன்னளுக்குள் வீசி சீட் பிடித்தது, அந்தக் கைக்குட்டையை யாரோ ஒருவர் தூக்கி எறிந்துவிட்டு அந்த சீட்டில் உட்கார்ந்ததால் பச்சை சட்டைக்கும் கர்ச்சீப்-உதாசீன புருஷருக்கும் நடந்த சண்டையில் ஏனோ கைதவறி என் சட்டைப் பாக்கெட் கிழிந்தது, கிழிந்த சட்டையை மறைக்க நெஞ்சுவலி வந்தவன் போலோ காதலின் விழுந்தவன் போலோ வலது கையால் இட மார்பை மூடிக்கொண்டு நான் ஆபீஸ் வந்து சேர்ந்ததையெல்லாம் கூறினால் நீங்கள் சிரிக்கலாம், அனுதாபமும் படலாம்.

உள்ளே நுழைந்து லெட்ஜரில் கையெழுத்திட்டுவிட்டு காபின் பக்கம் பூனைபோல் போன எனக்கு காத்திருந்தது ஆஃபீஸ் பாய் ரூபத்தில் வந்த அந்த அழைப்பு.

சார், எம்.டி நீங்க வந்தவுடனே உங்கள அவர வந்து பாக்க சொன்னார்.

எனக்கு இந்த ஆஃபீசில் பிடிக்காதது இரண்டு. முதலாவது  என் மேனேஜிங் டைரக்டர். இரண்டாவதும் முதலாவதுதான். 

பவ்யமாக அவர் அறையின் கதவைத் தள்ளி, "எக்ஸ்யூஸ் மீ சார். மே ஐ....

ம்ம்ம்ம்

40 வயதில், தலையிலிருந்து கீழே விழலாமா வேண்டாமா என நினைக்கும் டையடிக்கபட்ட மயிறும், கடம் போன்ற வயிறும், தூரப்பபார்வைக்காக கண்ணாடி அணிந்துள்ள சிரசும் சேர்த்து ஐந்தடி உருவமாய் கருப்பு (கரும்பச்சையாகக் கூட இருக்கலாம்) கோட்டணிந்து எம்.டி. வீற்றிருந்தார். அறையில் அதிகார வாசனை வீசியது.

குட் மார்ன்....முடிப்பதற்குள்,

மிஸ்டர் கிஷன், யு ஆர் ஃபையர்ட்

ரொம்ப கேவலமான ஜோக்கென்று உதாசீனப்படுத்தியிருப்பேன் வேறு யாராயிருந்தாலும். எம்.டி. யிடம், இந்த எம்.டி. யிடம் கண்டிப்பாகக் கூற முடியாது.

22 டிகிரியில் கண்டிஷன் ஆகியிருந்த காற்றிலும் வந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டு, “சாரி சார், தீடீர்னு என்ன?.....  ஐ வாஸ் லேட் டுடே பட் ஐ ஹேவ் ரீசன்ஸ். என் சட்டையைப் பாருங்கள், காலை இரயிலில்...

ஐ டோன்ட் கேர் எ ஷிட் அபௌட் யூர் ரீசன்ஸ். போர்டு மீட்டிங் நடந்து 60 மணி நேரமாவுது. உன்கிட்ட பினான்சியல் ரிசல்ட்ஸ் காப்பி குடுத்து பேப்பர் விளம்பரத்துக்கு அனுப்ப சொன்னேனே? ஏன் பன்னல? தண்டம் நீயா கட்டப்போற? அட பெனால்டி போனா போதுய்யா. பட் டோன்ட் யு ஹேவ் தி டிசிப்ளின். ஒரு சின்ன வேலைய முடிக்க துப்பில்ல. இது முதல் தடவை கிடையாது. இதுக்கு முன்னரும் ஒரு தரம்.... தினமும் லேட்டா வர்றது. தினம் ஒரு நொண்டி சாக்கு. எதாவது ஒன்னு சொல்லி இதுல லீவு வேற பத்து நாளக்கி ஒரு தரம். 

ஐ யம் டோட்டல்லி ஃபெட் அப் வித் யூர் ஆட்டிட்யூட். வெய்ட்.... கெட் லாஸ்ட். ஜஸ்ட் கெட் லாஸ்ட். ஐ டோன்ட் வான்ட் யு இன்சைட் மை ஆபிஸ்." என்று வாயில் எச்சில் தெறிக்க நூறு டெசிபெல்லில் கோபப்பட்டார்.

அவமானம் வலித்தது.

அவுட்பாக்சில் மெயில் மாட்டிகொண்டுவிட்டது, அதனால் தகவல் அட்வர்டைசிங் ஏஜென்சிக்கு செல்லவில்லை என்று சொல்லேண்டா முண்டம். பேசாமல் இருப்பதைவிட எதாவது பேசி வேலையைத் தக்கவைத்துக்கொள்' என இந்த சம்பவத்தை அவசரகாலமாக பாவித்து மூளை சில மட்டமான யோசனைகளைக் கூறினாலும், இன்ட்ரோவர்ட்களுக்கே உரிய  நாணத்தோடும் நாணயத்தோடும், கடந்த மூன்று நிமிடம்வரை 'என் ஆபீஸ்' என நான் நினைத்துக்கொண்டிருந்த அந்த இடத்திலிருந்து கிளம்பினேன்.

அவசரமாக வந்ததால் காலையில் இராசி பலன் பார்க்கவில்லை. விருச்சிகத்துக்கு இன்னக்கி சந்திராஷ்டமமோ?’ என யோசித்துக்கொண்டே முகமெல்லாம் வேர்த்து, அடுத்து என்ன செய்வது எனத்தெரியாது சாலையில் நடந்துகொண்டிருக்க, கைப்பேசியில் ஒரு குறுஞ்செய்தி, அவளிடமிருந்து. வேலை போனதைச் சொல்லி ஆறுதல் தேடலாம் என நினைத்து, அந்த பரிதாபத்திலும் கொஞ்சம் ஆவலாய் மெஸ்ஸேஜய்ப் படித்தேன். அதை முழுவதும் படித்துக்காட்டினால் நீங்களும் அழுதுவிடக்கூடும். 

ப்ரேக் அப்!!!

நீண்ட செய்தி ஒன்று வேறு யாருக்கோ எழுதுவதுபோல் எழுதி, 'எனை இனி தொடர்புகொள்ள வேண்டாம்'  என முடிந்திருந்தது. எழுத்துப் பிழைகளோடு இருந்தாலும் (என்ன அவசரமோ) அவை சொல்லவந்தது புரிந்தது. இது இன்றைய நாளின் மேலும் ஒரு அடி, எதிர்பாராதபோது வந்தது, எதிர்பார்க்கவே இயலாதது, மிக பலத்த ஒன்று!

சாலையோரம் இருந்த பார்க் ஒன்றில் உட்கார்ந்தேன், அந்நேரத்திலும் அங்கு ஜோடிகள். எவ்வளவு சந்தோஷம் அவர்களிடையில்! இருவருக்கும் வேலையும் இருந்து கல்யாணமும் செய்துகொள்வார்கள் போல! ரஞ்சனி இப்படி செய்வாள் என....

அடச்சே என்ன இது? இப்படிப் பிதற்ற ஆரம்பித்து விட்டேனே. இதற்கெல்லாம் காரணம்? 'பிளடி பிட்ச்', என உடனே வில்லனாக மாறும் மெலோடிரமாட்டிக் ஆசாமியல்ல நான்.  

பார்க்கில் இருந்து கிளம்பி, இந்த நாள் எனக்கு நடந்த கொடுமைகளை நினைத்துக்கொண்டே ரோட்டில் செல்கையில், சிந்தை தடுமாறி  ஒரு பேருந்திற்கும், காருக்கும், ஆட்டோ ரிக்ஷாவிற்கும்,  ஐஸ் வண்டி தாத்தாவிற்கும் நடுவில் மாட்டி,  ஒரு நொடி அனைவரையும் கதிகலங்கவைத்து... 

உயிரோடுதான் இருந்தேன்... 

'சாவுகிராக்கி, தேவடியா மவனே, வேற எங்காவது போய் சாவ வேண்டியது தானேடா!" 
அப்போதுதான் முடிவு செய்தேன்.

வீட்டுக்குள் நிழைந்தபோது, ஏழு மணி காட்டியது கடிகாரம். நல்ல கணம் தாங்கக் கூடிய நீண்ட துண்டை எடுத்து ஃபேனில் மாட்டி, கீழே விழுந்தால் அடிபடும் என எண்ணி பளு தாங்குமா என இழுத்துப் பார்த்துக்கொண்டேன். இப்பொழுது அந்த பச்சை நிற டவல் ஆபரணமாய் என் கழுத்தில். 

வெளியில் எங்கோ வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்என எனக்கேற்றாற்போல் பாடல் ஒலித்தது.

ஒரு நிமிடம் தடுமாறினேன்.

இருந்தாலும், எப்படி ஒரே நாளில் ஒருவன் எழும்போதே சுவரில் மோதிக்கொண்டு, இரயிலைத் தவறவிட்டு, சட்டை கிழிபட்டு, வேலை போய், காதல் தோல்வியடைந்து...... ச்சே...
கீழே ஸ்டூலை உதைத்துத் தொங்கினேன்.

தூக்குப்போட்டு தற்கொலை செய்ய நான் யாருக்கும் பரிதுரைக்க மாட்டேன், ரொம்ப சிரமம். மூளைக்கு செல்லும் இரத்தம், பிராணவாயு தடைப்பட்டு இருவது நொடிகளில் செரிப்ரல் ஹைபோக்ஸியா நேர்ந்து......... இறந்தேன்.

சிரிப்பு சத்தம். கொஞ்ச நஞ்சமல்ல. எக்காள சிரிப்பு சத்தம். அட இது என்ன? இறந்த பிறகு!!!.....

ஆவிகள் போன்ற உருவங்கள் பேசிக்கொண்டன: ஹா ஹா ஹா ஹா. மீண்டுமா?”

ஆம். ஹா ஹா ஹா

அட முட்டாளே! சரி, எத்தனை ஆண்டுகள் தாக்குப்பிடித்தான்?”

“25”

ஃபூ, வெறும் 25 தனா?”

இந்தக் குரல்களெல்லாம், இது என்ன எமலோகமா?

சரி அவனின் நினைவு ரிவர்சரை ஆன் செய். செத்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருப்பான்.

இதோஎனக் கூறி ஒரு உருவம் என்னை விட்டு விலகிச்சென்றது.

தலையில் அருவி நீர் பாய்ந்ததைப் போல இருந்தது. கொஞ்சம் வலித்தது.

ல் லா ம்   நி னை வு க் கு  ந் து. வந்தது.... 

ஐயோ, என்ன ஆனது.  ஸ்டேன்டிங்க்ஸ் என்ன? வென்றுவிட்டேனா?” என்றேன்.

ஸ்டேன்டிங்ஸா? ஹா ஹா ஹா! செத்துப்போயிட்டே!.. அதுவும் சூசைட். இப்போதான் கால்குலேஷன் நடக்குது. சோம்பேறித்தனம், பிரச்சனைகளைக் கையாளுவதில் சொதப்பல், தற்கொலை வேறு. கண்டிப்பா மைனஸ் அறுவது ஆயிருக்கும். ஹா ஹா ஹா.

அடச்சே.

புள்ளிப் பட்டியலைப் பார்த்தேன். 

1. யுக்தா: பாசிடிவ், 55, பலம்
2. கீர்வின்: பாசிடிவ், 43, மிதம்
3. மனிதன்: டெட், ஸ்கோர் கால்குலேட் செய்யப்படுகிறது, இறப்பு.

'அடச்சே! யுக்தா 55 ? போச்சு. போச்சு.. முதல் இடம் கிடைக்காது.'

அறையில் இருந்த மானிட்டர், "மனிதன்: படிநிலை இரண்டு, மொத்த புள்ளிகள் 103. தண்டம் -  தற்கொலைக்கு 40 , பிரச்சனையை எதிர்கொள்ளாததற்கு 30. இறுதி புள்ளிகள்: 33.

ஓ எழுவது பாய்ண்ட்ஸ் போச்சா? அறுவதுதான் போகுமென நினைத்தேன்!என்றான் என் நண்பன்.

நோ நோ நோ.... ச்சே.

சென்ற முறையைவிட இம்முறை நன்றாகவே விளையாடினாய். கடினமான தருணங்களில் உன்னுடைய எதிர்கொள்ளல்கள் அருமை. ஆனால் எப்போது காதல் தோல்வி வந்ததோ, அப்போதே, உன் எனெர்ஜி லெவல்கள் குறைந்துவிட்டன. இந்த வெர்ஷனில் காதல் தோல்வி வரும் இடங்கள், படு அற்புதமாக ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளன. மீள்வது ரொம்பக் கஷ்டம்.

பேசாதே. எல்லாம் உன்னால்தான். நான் தற்கொலை செய்யும்போது நீ எனக்கு ஏன் உதவி செய்யவில்லை?”

ஹா ஹா ஹா, உதவி செய்யவில்லையா? தற்கொலைக்குமுன் அந்த பாடலை ஒலிக்கச் செய்தது யார் என நினைக்கிறாய்?”

மீண்டும் ஒரு லைஃப் போய்விட்டதே என்ற ஆதங்கத்தில் இருந்தேன். 

மீண்டும் விளையாடுகிறேன். இம்முறை கண்டிப்பாக ஜெயிப்பேன்.

க்யூ-ஸி லைவ் கியரை என் மேல் மீண்டும் பொருத்தினேன்.  என்னதான் புது வெர்ஷன் என்றாலும் இதன் அறிமுக உரையை விட்டுத்தள்ளும் செய்யும் வசதி இதில் இல்லையென்பது ஒரு பின்னடைவு. கன்சோல் பேச ஆரம்பித்தது.

"மிக்கடோஸ்-இன் வர்ச்சுவல் கன்சோல் உங்களை வரவேற்கிறது. மல்டிவர்சின் மிகச்சிறந்த வர்ச்சுவல் கேமிங்க் "வாழ்க்கை விளையாட்டு”, வெர்ஷன் மூன்று. வீரர் பெயர்: மனிதன். தற்போதைய நிலை: மூன்றாம் இடம்.

விளையாட்டின் லெவல் 1: குழந்தை. குழந்தையாக இருக்கும் வரை உங்களுக்கு இது ஒரு விளையாட்டு என்பது தெரியும்.

லெவல் 2: இளமை. கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் மெய்நிகர் அமைப்பு உண்மை என நம்பி வாழ்க்கை விளையாட்டில் ஆழ்ந்து போவீர்கள்.

லெவல் 3: முதுமை. முதுமைப் பருவம் மிக முக்கியமானது. விளையாட்டின் மிகக் கடினமான பகுதி இதுதான். உங்களுடைய அனுபவம் என்னும் புள்ளிகளை வைத்து இந்த லெவலில் விளையாடினால் மட்டுமே நீங்கள் வெற்றி பெறலாம்.

நீண்ட நேரம் விளையாடி வெற்றி பெற இந்த வழிமுறைகளை பின்பற்றவும். விளையாட்டில் உங்களின் சக்திகளாக தொடுதல், சுவைத்தல், நுகர்தல், பார்த்தல் மற்றும் கேட்டல் என முறையே ஐந்து புலன்களும் அவைகளை முறையாக ஆக்டிவேட் செய்ய, யோசிப்பதற்கு ஆறாம் அறிவான மனமும் கொடுக்கப்பட்டுள்ளன. இவையனைத்தையும் சரியாக பயன்படுத்தி உண்மையானது எது என நீங்கள் தீவிரமாக சிந்திக்கும் பட்சத்தில் இந்த வர்ச்சுவல் என்விரான்மென்ட் கலைந்து, ஆட்டத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

மேலும், கேமில் அழுந்தி, பொய், பொறாமை, கோபம், கொலை என நீங்கள் செய்யும் விஷமங்களுக்கு அபராதம் உண்டு.

இந்த விதிமுறைகளை ஆயிரமாவது முறையாகக் கேட்கிறேன்.

இருந்தும் நீ ஒரு தடவை கூட வென்றதில்லையே! ஹா ஹா ஹா

கன்சோல்: விளையாட்டில், மிக மோசமான கட்டங்களை சமாளிக்க உங்களின் வழிகாட்டி நண்பர் உங்களுக்கு உதவுவார். உங்கள் வழிகாட்டியாக நீங்கள் தேர்வு செய்யும் நண்பர்?”

நண்பன் பெயர் கடவுள்’.”

நானேதான்என் பக்கத்தில் நின்ற கடவுள்அவனின் க்யூ-சி கியரை தலையில் பொருத்திக்கொண்டு என் பக்கத்தில் அமர்ந்தான்.

இந்த விளையாட்டில் உங்களின் வழிகாட்டி கடவுள். இனி கடவுள் உங்களுக்கு உதவுவார்.

நன்றாய் உதவுவார். உன் ஸ்பெஷல் அமைப்புகளைப் பயன்படுத்தி உன் பெருமைகளை அந்த மெய்நிகர் அமைப்பில் பரவச் செய்வது உனக்கு கொஞ்சம் அதிகப்படியாக படவில்லையா? வர்ச்சுவல் என்விரான்மென்ட் முழுக்க எங்கு பார்த்தாலும் ஆலயங்கள், பூஜை புனஸ்காரம். யு நார்சிஸ்ட்.

ஹா ஹா ஹா, என்ன செய்வது? பழைய வெர்ஷன்களில் விளையாடி பழகிவிட்டது. ஆனால் அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இந்த வெர்ஷனில் போட்டியின் கடினத்தன்மை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், என்னதான் உனக்கு போதித்தாலும், நான் உருவாக்கும் வர்ச்சுவல் அறிவுரைகள் உன்னைவந்து சேர்வது கொஞ்சம் கஷ்டம்தான்.

உனக்கு சுலபமாக இருக்கட்டும் என சில முக்கிய அறிவை நான் மதம் என்ற அமைப்பின் மூலம் வழங்கினால், அதே அமைப்பை ரெப்ளிகட் செய்து தவறான விதிமுறைகளைப் புகுத்தி இந்த கன்சோல் விளையாட்டை மேலும் கடினமாக்குகிறது.

உண்மையைக் கண்டுபிடிப்பதே இந்த விளையாட்டு என்பதால், நிஜம் எது என சிந்திக்கும் திறனை உன்னுள் அதிகரிக்க அறிவியல் என்ற அமைப்பை உருவாக்கினால், ஏற்கனவே நான் அமைத்த மதத்திற்கும்இந்த அறிவியலுக்கும்பேதங்களை ஏற்படுத்தி கேம் குழப்பம் செய்கிறது. உண்மையாகவே இந்த வெர்ஷனின் ப்ரோக்ராமிங் மிக மிக அருமை. டெவலப்பிங் மற்றும் டெஸ்டிங் டீம் பக்ஸ் எதுவும் இல்லாமல் இருக்க நிறைய மெனக்கட்டிருக்கிறார்கள்!

இருவரும் பேசிக்கொண்டே இருப்பது கன்சோலிற்கு பிடிக்கவில்லை என நினைக்கிறேன்; இப்படி கேட்டது:

விளையாட நீங்கள் தயாரா?’

இருவரும்: தயார்

கன்சோல் கவுண்டவுன்களைக் கொடுக்க ஆரம்பித்தது. அறுவது.... ஐம்பத்தி ஒன்பது...

வெர்ஷன் 3ன் விதிமுறைகளை இப்போது நன்றாக படித்துவிட்டேன். இண்டெலிஜென்ஸ் அமைப்பிற்கு முக்கியம் உன் ஸ்பெஷல் பவாரான மனதை சரியாகப் பயன்படுத்துவதுதான். கன்சோல் அறிமுக உரையின்போது சொன்னது 5 புலன்கள் மற்றும் கூடுதலாக மனம் என்கிற 6 சக்திகள்தான். அனால் நீ வெற்றி பெறுவதற்கு அதில் சொல்லாத பவர் ஒன்று உண்டு.

நிஜமாகவா. அது என்ன?”

ஹா..... சொன்னாலும் வர்ச்சுவல் என்விரான்மென்டுக்குள் நுழைந்த பிறகு அது உனக்கு நியாபகம் இருக்கவா போகிறது

இருந்தாலும் சொல்கிறேன். முக்கியமான தருணங்களில் நல்லது கெட்டது. அதாவது, விளையாட்டை ஜெயிக்க தேவையானது தேவையில்லாது எது என உணர்ந்து செயல்படும் புத்தி. விழிப்புணர்வு.

வாவ்... முக்கியமான தருணங்களில் நாம் எடுக்கும் முடிவு. அப்சொலூட்லி. விழிப்புணர்வை எப்படி விளையாடும்போது எனக்கு அனுப்புவாய்?”

கேமில் அதற்கு வழியில்லை. நான் உனக்கு எவ்வளவு உதவினாலும் வெற்றியை உறுதி செய்யும் இந்த க்ரிடிகலான சக்தியைப் பயன்படுத்தும் சுதந்திரம் உனக்கு மட்டுமே உண்டு. உண்மையில் இந்த விளையாட்டின் நோக்கமே அது தான். உன்னுடைய முடிவுகள் உன் கையில்!

வாவ்... பீஸ் ஆஃப் ஆசம் ப்ரோக்ராமிங் கடவுளே!

ஆச்சரியப்பட்டது போதும், கவுண்டவுனைப் பார், இன்னும் சில நொடிகளில் விளையாட்டு ஆரம்பித்துவிடும். வாழத் தயாரா?”

நிச்சயமாக.

மூன்று... இரண்டு.... ஒன்று....

வீவீவீவீவீவீவீவீவீவீவீவீவீவீவீவீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

மீண்டும் குழந்தையாக பிறந்தேன்...........


Sunday, 1 May 2016

விஷ் யு எ ஹாப்பி நியு இயர்!

டிசம்பர் 31, கி.பி. 2100

‘உலகமே’ புது  நூற்றாண்டின் பிறந்தநாளை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருந்தது. அதாவது கடந்த வெள்ளங்களில் சிக்கி இறக்காத சிலரும், வெயிலின் தாக்கத்திற்கு எதிர்ப்பு சக்தி கொண்ட சிலரும், காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படாத சிலரும்.

நான் வேலை செய்யும் அலுவலகத்தின் மூலம், ‘எவேகோ’ நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டு சிறப்புக் கொண்டாட்டத்திற்கான ஓர் அனுமதிச்சீட்டுக் கிடைத்ததால் நானும் இரவை நோக்கி ஆர்வமாகக் காத்திருந்தேன்.

ஆறு மணியடித்தது... என் டபுள் ரோட்டார் ஹோவர்காப்டரில் ‘எவேகோ’வை நோக்கிப்பறந்தேன். டிராபிக் அவ்வளவு மோசமில்லை. ஆனால் புத்தாண்டுக் குதூகலத்தில் இளைஞர்கள், தங்களின் காப்டரை 15௦களில் பறக்கவிட்டுப் பலரையும் கதிகலங்கவைத்துக்கொண்டு சென்றனர். சிக்னலில் ஒருவன் என் வண்டியைப்பார்த்து, ‘க்ரெக், இந்த மாடலெல்லாம், ம்யூசியத்தில் மட்டும்தான் பார்க்கலாம் என நினைத்தேன். ஃபண்ணி அவுட்டேட்டட் மெக்!’ என்று தன் பின்னிருக்கையில் அவனை இறுக்கமாகக் கட்டிகொண்டிருந்த பெண்ணிடம் கூறினான். இருவரும் என்னை ஏளனமாகப் பார்த்து சிரித்தது எனக்குக் கடும் கோபத்தை வரவழைத்தது. அனால் நான் பொதுவாக வம்பு சண்டைக்குப் போவதில்லை, வந்த சண்டைக்கும் போவதில்லை என்பதால், பல்லைக் கடித்துக்கொண்டேன். சிக்னல் வீழ்ந்து, அவன் வாகனம் வீரிட்டுப் பறந்தது.

கொஞ்ச தூரம் பறந்தேன். பில்லியனில் இருந்த அவனின் ஜி எஃப் சிரித்தது வெகு எரிச்சலாக இருந்தது. அவன் முகரைக்கு அழகான அவள். அந்த சம்பவத்திலிருந்து மீள ஒரு குளிர்பானம் அருந்தலாமா? சமீபத்தில் தென்பட்ட தானியங்கி ஃபுட் & ஏர் வெண்டாரிடம் சென்று, ஒரு ‘ஃபிஸ்’ மற்றும் ‘ஆக்சிஜன்’ ஒன்று... ஆர்டர் செய்தேன்.

இயந்திரம் ‘ஃபிஸ்.. ஒன்று ஆக்சிஜன் ஒன்று’  எனக்கூறி விஸ்ஸ்ஸ் என சத்தமிட்டது.

‘உங்கள் சிட்டிசன் எண்ணைக் கூறவும்.’

‘அ35௦மி319’ எனக்கூறி, என் கண்களை ஸ்கேனருக்குள் காட்ட, மீண்டும் விஸ்ஸ்ஸிட்டு குளிர்பானமும் ஆக்சிஜனும் வெளிவந்தன. இரண்டையும் கையில் எடுத்துக்கொண்டேன்.

பொருள் வாங்கியதற்கான எலெக்ட்ரானிக் பில் கைக்கணிணிக்கு அனுப்பப்பட்டதன் அடையாளமாக கையில் கட்டியிருந்த க்யூ-ட்ராக்கர் விறுவிறுத்தது.

‘சிட்விக்’கில் பொருள் வாங்கியதற்கு நன்றி. புத்தாண்டு முன்வாழ்த்துக்கள். மீண்டும் வ...

அதற்கு பதிலளிக்க நேரமில்லாததால் நகர்ந்தேன். கேனைத்திறந்து ஆக்சிஜன் டேங்கிற்குள் புது ஆக்சிஜனை ஏற்றினேன். நுரையீரலுக்கு இதம். ஹா... நிம்மதியான உணர்வு. காப்டரில் உட்கார்ந்துகொண்டு குளிர்பானத்தை ருசித்தபடி ‘எவேகோ’ வந்தடைந்தேன்.

தெருவெங்கும் விழாக்கோலம். சிறுவர்கள், இளைஞர்கள் என பலரும் புத்தாண்டு பிறக்கப்போகும் மகிழ்ச்சியில் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டு இருந்தனர். அரசாங்கத்தால் நிர்மானிக்கப்பட்ட பிரம்மாண்ட வி.ஆர் விளம்பரப் பலகைகளில் பிரதமர் அனைத்து மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக்கொண்டிருந்தார். நடு நடுவே, புத்தாண்டின் போது பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் ஒளி ஒலித்தன.

ஹோட்டலின் 66வது மாடியின் வாசலில் காப்டரை ஒப்படைத்துவிட்டு, நுழைவாயிலில் ஸ்கேனரில் கண்களைக் காண்பித்துவிட்டு உள்ளே சென்றேன். ஒரு ரோபோட் என்னிடம் வந்து, ‘இங்கே காற்று புதுப்பியுள்ளதால் உங்களின் பிராண வாயு செயலியைத் தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்றது. மூக்கிலிருந்து கழட்டி அதனிடம் அளித்தேன். ‘செல்லும்போது நுழைவிடத்தில் செயலி எண்ணைக் கூறி பெற்றுக்கொள்ளவும் எனக்கூறி மறைந்தது.

கொண்டாட்டம் நடந்துகொண்டிருக்கும் அறையில் நுழைந்தேன். மிகவும் சத்தமாக ஒரு ரோபோட் டி.ஜே. மெட்டாலிக்கா போட்டுக்கொண்டிருந்தது. ஆண்கள், பெண்கள், ரோபோட்கள் என அனைவரும் தங்களை மறந்து ஆடிக்கொண்டிருந்தார்கள். நானும் ஒரு ‘அல்கோ’வைக் (ஆல்கஹால்) கையில் பற்றிக் கொண்டாட்டத்தில் புகுந்தேன். பண்ணிரண்டு மணிக்குப் பக்கத்தில் செல்ல செல்ல ஆட்டம் களைகட்டியது. பலரும் அன்றாட வாழ்விலிருந்து விடுபட்டு தங்களின் கோபம், துன்பம், ஆடைகள் என அனைத்தையும் தூரப்போட்டுவிட்டு மெய்மறந்து கொண்டாடிக்கொண்டிருந்தனர்.

அதில் ஒரு பெண், அழகான, கொஞ்சம் அதிகமாகவே, என்னிடம் வந்து: ‘ஹேயோ’...

பொதுவாக என்னிடம் பெண்கள் பேசுவது குறைவு. டேட்டிங் சென்றது கிடையாது. ஏன்? அரசாங்க சேவையான ஆர்-டேட்டிங் எனப்படும் ரோபோட் அழகிகளிடம்?.. இல்லை. பணம் செலவழிக்க எனக்குப் பிடிக்கவில்லை.

அவளிடம், என்னசொல்வது எனத் தெரியாமல், ‘ஹேயோ, புத்தாண்டு வாழ்த்துக்கள்’ என்றேன்.

அவள் ஆடிக்கொண்டே, ‘உங்களுக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் சென்னையா? என்றாள்’.

‘ஆம். நீங்கள்?’

‘நான் திருச்சி. புத்தாண்டுக்காக இன்று வந்துள்ளேன். சேர்ந்து ஆடலாமா?’

‘தாரளமாக! அவளுடன் சேர்ந்து ஆடினேன். மது, அழகிய மாது, மாலைப் பொழுது - மயங்கக் காரணங்கள் நிறைய இருந்தன.’

புத்தாண்டின் கவுண்டவுன் ஆரம்பித்தது. ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று....

‘ஹாய் எவ்ரிபடி, விஷ் யூ எ ஹாப்பி நியூ இயர்’ என அருகப்பழயதான ஒரு சினிமாப் பாடல் நியு இயர் வாழ்த்தினது. ஜோடிகள் இடைவெளியில்லாமல் கட்டிக்கொண்டு முத்தமிட்டுக்கொண்டனர். பலரும் ஹா ஊ என கத்தி உற்சாகமாக வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டனர்.

‘என்ன வழக்கம் இது? எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்தப் பழைய பாடல்தான் புத்தாண்டு அன்று முதல் பாட்டாக ஒலிக்கவேண்டுமா?’ என்றாள்.

நானும், ‘ஆம் வேற பாட்டுக்கென்ன பஞ்சமா. வருடா வருடம் இதைப்போட்டு இதை ஒரு புது வருடக் குருட்டு சம்பிரதாயம் ஆக்கிவிட்டார்கள். யு நோ வாட்? இது கிட்டத்தட்ட 120 ஆண்டுகள் பழமையான பாடல். நாயகன் டூ வீல்டு லேண்ட் ஆட்டோமோட்டிவை ஓட்டிவந்து நியு இயர் வாழ்த்து கூறுவார். ஒரு கண்ணாடித்திரையைக் கூட உடைப்பார். நல்ல தமாஷாக இருக்கும்.’

அவள், ‘ஹா ஹா ஹா. உனக்கு நிறைய விஷயம் தெரிந்திருகிறதே!’ என ஆச்சர்யப்பட்டாள்.

என் கன்னம் சிவந்தது. ‘ஹி ஹி. நன்றி. அந்த ஹீரோ பெயர் கூட... ஹ. கம்... கம்லாவோ?...’

‘பரவாயில்லை விடு. பை தி வே, உன் பெயர் என்ன? கேட்க மறந்துவிட்டேன். நான் ‘கியோ.’’

‘என் பெயர் ஜீத்ரீ’

‘ஜீத்ரீ, எங்காவது வெளியில் செல்லலாமா? இங்கு இருப்பது எனக்குக் கொஞ்சம் அன்னீசியாக உள்ளது.’

நானே எப்படி கேட்பது எனத் தயங்கியிருந்தேன். நன்றி கியோ.

‘கண்டிப்பாக! ஒரே இரைச்சலாக உள்ளது இங்கே. வா...’ அவசரமாக வாயிலில் ஏர் மாஸ்க் எண்ணைக் கூறி, வாங்கி அணிந்துகொண்டேன். வெளியே வந்தோம்.

‘நீ எப்படி வந்தாய்? வாகனம்?’

‘நான் ஏர் பூலிங்கில் வந்தேன் ஜீத்ரீ’

‘நல்லது, என் காப்டரில் செல்லலாம் என்றேன். உன் ஆக்சிஜன் மாஸ்க் எங்கே?’

‘நான் மாஸ்க் போட்டுக்கொள்வதில்லை. இந்த நச்சுத்தன்மையெல்லாம் என்னை ஒன்றும் செய்யாது. புத்தாண்டுக்காக அரசு இன்று அப்சர்பர்களை அதிக நேரம் இயக்குகின்றது. தவிர பல பில்லியன் காலன் ஆக்சிஜனும் இன்று டோமிற்குள் விடப்பட்டுள்ளது. செய்திகள் கேக்கலையா?

‘ஹி ஹி, இல்லை..’.

சீடியூப் சப்ஸ்கிரைப் செய்திருந்ததால் இன்று புத்தாண்டு பற்றி அந்தப் பழைய காணொளி வந்தது. முதலில் ஒரு செய்தி சேனலுக்கும் பதிந்துகொள்ள வேண்டும்!

காப்டரில் பறந்துகொண்டிருந்தோம். எனக்கு உடம்பெல்லாம் ‘ஜிவ்’வென்றிருந்தது. முதன்முறையாக ஒரு பெண்ணோடு தனியாக... அவளின் தேகம் என் பின்புறம் உரசிக்கொண்டிருந்தது. என் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை மாற்றப்போபவள் இவள்தானா?

ஒரு தனிமையான உணவு விடுதிக்கு சென்று உணவருந்தினோம். மிகச்சீரான பல்வரிசை, பயோ லூமிநெசன்ட் வெளிச்சத்தில் பக்கத்தில் பார்க்கும்போது இன்னும் அழகாகவே இருந்தாள். அவளை இம்ப்ரெஸ் செய்வது இப்போது மிகமுக்கியமாதலால், ஏ ஜோக்ஸ், குட்டிக்கதை, அறிவியல் கட்டுரைகள், காமத்துப்பால் என அனைத்தையும் பிரயோகித்தேன்.

அனைத்திற்கும் பதில் ‘களுக்’ என்ற சிரிப்பு. நிறைய பேசினோம், சிரித்தோம், இடையிடையில் தெரியாமல் படுவதுபோல் அவள் கையைத்தொட்டேன். சாப்பிட்டுவிட்டு காப்டரில் ஏறினோம்.

‘எங்கு செல்லலாம் கியோ?’

‘காப்டரை இறக்கிவிட்டு கொஞ்ச தூரம் நடக்கலாமா?’

‘கண்டிப்பாக’.

தனியாக இருப்பதால், அதுநடக்கும் பட்சத்தில் இந்த இடைஞ்சல் எதற்கென ஆக்சிஜன் மாஸ்கை கழற்றி காப்டரில் வைத்தேன்.

நள்ளிரவு. சற்று நேரம் மெளனமாக நடந்தோம். என்னதான் கார்பன் அப்சர்பர்கள் இரவில் இயங்கினாலும், மூச்சு விடும்போது தொண்டை கரகரத்தது.

ஓரிடத்தில் நின்றோம். ‘ஹ, கியோ!’

‘யெப்?’

மெதுவாக அவள் கைகளைப் பற்றினேன். அவளிடமிருந்து எந்த எதிர்ப்புமில்லை. ஒரு இடத்தில் நின்று அவள் இடையைப்பற்றி என் பக்கம் திருப்பினேன். கிட்டத்தட்ட அவள் இதழ்களிடம் நெருங்கும்போது...

‘ஒரு நிமிஷம் ஜீத்ரீ’.....

கொஞ்சம் அளவுக்கு மீறி போய்விட்டேனா?.. லேசாக வியர்த்தது.
‘அங்கே ஒரு கேமரா உள்ளது. சற்றுதள்ளிப் போகலாமா?’

அப்பாடா!..... கொஞ்சதூரம் நடந்து சற்றே இருளான சந்து ஒன்றினுள் நுழைந்தோம். ஒரு ஆள் ஆட்டோமேட்டன்கள் நடமாட்டமுமில்லை.

அவள் இரு கைகளையும் என் இரு கைகளால் பற்றி... நேரே அவள் வாயைக் கவ்வ... என் கைகளில் பயங்கரமான அழுத்தத்தை உணர்ந்தேன்.

‘கியோ, ஏன் இப்படி என் கைகளை முறுக்குகிறாய்?  ஆஆஆ!?’

திடீரென என் மர்மஸ்தானத்தில் விழுந்த அடியால் நிலைகுலைந்தேன். கீழே மண்டியிட்ட எனக்கு, மண்டையில் ஓங்கி ஒரு அடி. என் வலது கையைப் பிடித்துத் திருகி ஒரு சுவரின்மேல் என் தலையை வைத்து அழுத்தினாள். எனக்கு மயக்கமாய் இருந்தது....

‘உன் சிட்டிசன் நம்பரைச் சொல்.’ அவள் குரலில் அதட்டலோ கோபமோ இல்லை. அதே அன்பான குரல்.

‘கியோ... நீ என்ன செய்கி..?’ பேசி முடிப்பதற்குள் அடி வயிற்றில் ஒரு மரண உதை.

‘நம்பர்?’

‘ஆஆஆ.... அ350மி319.... ஆஆ....’

என் ஒரு கண்ணை பலவந்தமாய் திறந்து கையடக்க ஸ்கேனர் ஒன்றால் அதை ஓத்தி எடுத்தாள். பின் ஒரு உக்ரமான உதை. சாலையோரத்தில் சுருண்டு விழுந்தேன்.

காப்டரின் 'கடகட' சத்தம்போல் கேட்டது. அரைகுறையாக கண் விழித்து தலை நிமிர்ந்து பார்த்தேன்.

‘ஜீத்ரீ, நீ நல்ல பையன். அதிகம் தொந்தரவு கொடுக்கவில்லை. உன் புத்தாண்டு பரிசுக்கு நன்றி. அப்புறம் அந்தப் புத்தாண்டுப் பாட்டில் வரும் ஹீரோவின் பெயர் கம்லா அல்ல. கமலஹாசன். விஷ் யு எ ஹாப்பி நியு இயர்’...  என்னுடைய காப்டரில் பறந்துகொண்டிருந்தாள்.

கையில் டிராக்கர் ‘பீங்க் பீங்க்’: ‘உங்கள் கணக்கில் இருந்த அனைத்து பணத்தையும் எடுத்துவிட்டீர்கள். ஓவர்டிராஃப்ட் லிமிட்டைத் தாண்டுவது பரிந்துரைக்கப்படுவதன்று.’

வலியில் உடம்பை அசைக்கமுடியவில்லை.

இன்ஸ்யூரன்ஸ் க்லெய்ம் கிடைக்க சில வாரங்கள் ஆகலாம். ஆனால் ஆக்சிஜன் மாஸ்க் இல்லையென்றால் சிலமணி நேரத்தில் மரணம்தான்.

தூரத்தில் ஒரு கட்டடத்தின் க்யூ-விளம்பரப்பலகை புத்தாண்டு அன்று கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளை ஒலித்துக்கொண்டிருந்தது மெல்லியதாகக் கேட்டது: ‘மக்கள் அனைவரும் பாதுகாப்பாக புத்தாண்டைக் கொண்டாடுமாறு அரசு கேட்டுக்கொள்கிறது. யாருமற்ற இடத்தில் அந்நியர்கள் உதவி கேட்டாலோ அல்லது இன்ஸ்டன்ட் டேட்டிங் செல்லலாம் எனத் தெரியாதவர்கள் அழைத்தாலோ, ஏமாறாதீர்கள். அவை வழிப்பறி செய்யும் ரோக் ரோபாட்டுகளாக இருக்கலாம். விழிப்புணர்வு அவசியம்.’

Thursday, 28 April 2016

ஜோவேசோ!!

குளிர்காலம் என்பதால் சீக்கிறேமே இங்கு இருட்டிவிட்டது. காடுகளின் சிறப்பம்சம் என்னெவென்றால், இரவில்தான் அவை உயிர்ப்பெறும். நாட்டிற்குள் கேட்டிராத நானாவித வினோத சப்தங்களும் எழும்பி நம் அடிவயிற்றில் படபடப்பை உருவாக்கும். இரவில் மட்டுமே வெளிவரும் வினோதமான பல மிருகங்கள், அழிந்துவிட்டது என நினைக்கப்படும் பல மிருகங்களையும் பற்றிய ஆராய்ச்சியில் நான் ஈடுபட்டுள்ளதால் இந்த காட்டிற்குள் வந்து தங்கியுள்ளேன். கடந்த மூன்று நாட்களாய் எல்லாம் சரியாகத்தான் இருந்தது, இருந்ததாகத்தான் நினைக்கிறேன். ஆனால் இன்று சாயங்கலாம், கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு ஒளிப்பிழம்பு வந்து இறங்குவதைக்கண்டேன். பின் தொடர்ந்தேன். வின்கல்லாக இருக்குமா?

தூரத்தில் மிக சிறியதாக இருந்த அந்த ஒளிக்கீற்றின் பக்கத்தில் செல்ல செல்ல... அப்போது நான் பார்த்தது??!!? 

வாழ்நாளில் என்னால் மறக்கமுடியாத காட்சியது. அரைக்கோளம். ஒன்றரை யானை அளவிருக்கலாம். அந்தப் பெரிய கோளத்தின் அடிப்பகுதியில் ‘விர்ர்ர்ர்’ என சத்தமிட்டு சுழழும் ஒரு தகடு போன்ற அமைப்பு. இரு உலோகக்கால்கள் போன்ற அமைப்பு அந்த வாகனத்தின் உடலிலிருந்து நிலத்தின்மேல் ஊன்றி நின்றன. அதன் கதவு ‘விஷ்ஷ்’ என்ற சத்தத்துடன் திறந்தது. 

இரண்டு பச்சை நிற உருவங்கள், சுமார் மூன்று அடி உயரம், ஓடிசலான தேகம், நான்கு கைகள், கால்களில்லை, அமீபா போல ஊர்ந்து அந்த வாகனத்திலிருந்து வெளிவந்தன. கண்ணாடியால் செய்யப்பட்ட முகமூடி போன்ற ஒன்றை அவை அணிந்திருந்தன. ஒரு மரத்தின் பின் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். என் உடல் முழுவதும், வியர்வையில் தொப்பலாகியிருந்தது. 

இறங்கிய இரண்டும் எனை நோக்கின. ஓட முயல்கிறேன்.. ஆச்சரியத்தில் என் கால்கள் செயலிழந்துவிட்டன. 

அதில் ஒரு ஜந்து என்னை நோக்கி 'மானுடா, இங்கே வா’, என்றது. 

சத்தம்? வாய் அசையவில்லை... அவைகளுக்கு வாயேயில்லை! இயந்திரத்தனமான குரல். எனக்குத் தலை சுற்றியது.

அவை எனை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக வரத்தொடங்கின. ஓட முயன்று, பின்னால் ஒரு கட்டையில் இடறி மல்லாக்க விழுந்தேன். இதற்குள் அவை என்னிடம் வந்துவிட்டன. மண்ணில் கையைத் துளாவி ஒரு மரக்கட்டையை ஆயுதமாக எடுத்துக்கொண்டேன்.

‘மானுடா.. பயப்படாதே’ என்றது அவற்றில் ஒன்று..

மினுமினு பச்சை நிறம், நான்கு கைகள், முற்றும் துறந்த முனிவர் போல ‘மானுடா‘ என அழைக்கும் பாங்கு.... பயப்படாமல்?? 

‘பக்கத்தில் வராதே...போய்விடுங்கள்...கொன்னுடுவேன்...... எனக்கு கராத்தே தெரியும்...’ அதாவது, எனக்கு கராத்தே தெரியாதது அதற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இரு கைகளால் என் தோளைப்பற்றி மற்ற இரு கைகளால் என் காலைப்பற்றி என்னைதூக்கி ஒரு செங்குத்தான மரத்தை நேரே நிறுத்துவது போல நிறுத்தியது.

‘இன்னொரு ஜந்து, பயப்படாதே.... நாங்கள் உன் தோழர்கள் என்றது.....’

அப்போதுதான் நினைத்தேன், அடச்சே இது ஒரு கனவு, விழித்துக்கொள்.. விழித்துக்கொள்....

முடியவில்லை..... நிஜம்தான்... 

ஒருவேளை மோசமான கேண்டிட் கேமரா டிவி நிகழ்ச்சியாய் இருக்குமா. எந்நேரத்திலும் அந்த பச்சைநிற ஆடைகளைக் களைந்துவிட்டு ‘அங்கே பாருங்கள் கேமரா’ எனக் காட்டுவார்களா??

மூச்சிறைக்க....."நீ நீங்கள் யார்?....”

“நீங்கள் யார்? ஹ்ம்ம் நல்ல கேள்வி. உங்கள் மனித வழக்குப்படி உங்கள் இனத்தவரை அடையாளம் கண்டுகொள்ள... அது என்ன?  ஆ... ‘பெயர்’. ‘பெயர்’ என்ற ஒரு அடையாளக் குறிப்பை கொண்டுள்ளீர்கள். ஆனால் நாங்கள் அப்படியல்ல, எங்களின் பிரத்தியேகக் குறியீடு எங்களின் வித்தியாசமான வாசனையே!"

அப்போதுதான் கவனித்தேன், என் இடது பக்கம் நின்றதின் மீது பெட்ரோல் போன்ற வாசனை, வலது பக்கம் நின்றதின் வாசம்..... கிர்ணிப்பழமா??

தன் பக்கத்திலிருந்த ஜந்துவைப் பார்த்து ‘அட நண்பா, நுகர் அறிவு நுண் அமைப்பைப் பற்றி அவனுக்கு எப்படித் தெரிய வாய்ப்புண்டு? சரி.. இது எந்த இடம்?’ என வினவியது.
அதன் கூட்டாளி, தன் கழுத்தில் தொங்கிய ஒரு வண்ண வாட்ச் போன்ற பொருளைப்  பார்த்து 11 டிகிரி 37 நிமிடங்கள்  0 நொடிகள் வடக்கு, 76 டிகிரி 34 நிமிடங்கள் 0 நொடிகள் கிழக்கு, என்றது.

‘ஓ தமிழ் நாடா??’ என்னைப்பார்த்து.. ‘பூமி நண்பனே வேண்டுமென்றால் நீ என்னை, கொற்கைப் பாண்டியனென்றும், என் நண்பரை செல்வேந்திர பூபதி என்றும் அழைக்கலாம். எங்களுடைய சிந்தனைபெயர்க்கும் கருவி தன்னாலே இடத்திற்கு தகுந்தாற்போல், மொழிகளைப் பேசுமாறு மாறிக்கொள்ளும். எங்களின் பறக்கும் கலனை தானியங்கி அமைப்பில் ஓடவிட்டு சிறிது ஓய்வெடுத்ததால், எந்த இடத்தில் இறங்கினோம் என்பதை நான் கவனிக்கவில்லை’, என்றது.

பக்கத்திலிருந்த அதன் நண்பன் மீண்டும் அந்த கழுத்துக் கடிகாரக் கணினியைப் பார்த்து, ‘வேண்டாம், பாண்டியர் பூபதி எல்லாம் வேண்டாம். இப்போது ஆண்களுக்கு ராஜேஷ், சுரேஷ், ஹரிஷ் போன்ற பெயர்கள்தான் இப்பகுதியில் அதிகம் புழக்கத்திலுள்ளன’ என்றது. 

‘சரி சரி, என் பெயர் ராஜேஷ், என் நண்பர் பெயர் அஜீஷ்...’

‘எனக்கு மனீஷ்தான் பிடித்துள்ளது....’

‘சரி உன் பெயர் மனீஷ், வைத்துக்கொள்.....’

இங்கே என்ன நடக்கிறது, என விளங்குவதற்கு, எனக்கு சற்று நேரம் பிடித்தது.... வானத்திலிருந்து பச்சை நிறத்தில் ஒரு கோளம் பூமியில் இறங்கி நான்கு கை கொண்ட இரு பச்சை நிற ஜந்துக்கள் இங்கு வந்து தங்களுக்குள் பெயர் சூட்டிக்கொண்டு......

‘பூமி நண்பரே.... உங்கள் பெயர் என்ன?’

‘ம்.. ம...... மிருத்யுஞ்சய்’, என்றேன்.

‘ஓ.. மிருத்யுஞ்சய்..... சாவில்லாதவன் என அர்த்தம்...’ 

‘ஜோவேசோ...ஜோவேசோ’... என்றன.

ஜோவேசோ??? அருமை என அர்த்தமா? இல்லை ரொம்ப சுமார் என கிண்டல் செய்கின்றனவா?

‘யா யார் நீங்கள்? வேற்று கிரக வாசிகளா?‘

‘ஆம்... நாங்கள் பூமியிலிருந்து சுமார் 4 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள நச்சத்திர மண்டலத்திலிருந்து வந்துள்ளோம்.’

‘எங்கள் கிரகத்திற்கு ஏன் வந்தீர்கள்?’

‘ஏனா? யாதும் கோளே... யாவரும் கேளீர்... என நீ கேள்விப்பட்டதில்லையா?..’ என சிரித்தது. அதாவது தொலைக்காட்சி சிட்காம்களில் வருவதுபோல் சிரிப்பொலி மட்டும் கேட்டது... 

'இந்த பிரபஞ்சமே நம் வீடு, எங்குவேண்டுமானாலும் செல்லலாமே!'

‘அஹ்ஹ்ஹ், பூமிவாசிகள்... குட்டிகிரகத்தில் குதிரை ஓட்டுபவர்கள்’ என அதன் நண்பன் சலித்துக்கொண்டது.

‘அப்படியானால் வேற்று கிரக வாசிகள் இருப்பது உண்மைதானா? பல வருடங்களாக உங்களைப்பற்றிய செய்திகள் வருவதெல்லாம்???’

சர்வசாதாரணமாக ‘ஆம்.... உண்மைதான்... உங்களின் சூரியன் உருவாக ஆரம்பித்த போதே இந்த சூரியக்குடும்பதை எங்கள் இனம் கண்காணித்து வருகிறது. முன்பெல்லாம் இந்த கிரகத்தில், பல பிராணிகள் முட்டாள்தனமாக சுற்றித்திரியும். சில நூற்றண்டுகளாகத்தான் மனிதர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளீர்கள்’, என்றது.

மற்றொரு, ஜீவராசி, “இப்போதுதான் நீங்கள் உங்களின் கிரகத்தைத்தாண்டி வெளியே வந்து உங்கள் சூரியக்குடும்பத்திலுள்ள கோள்களைப் பற்றி ஆராயவே தொடங்கியிருக்க்கிறீர்கள். எங்களுக்கு இது நல்ல பொழுதுபோக்கு.”

‘உங்களுக்கு பொழுதுபோக்கா?’

‘உலகம் தொடங்கி, முதல் உயிரினம் இந்த பூமியில் பரிணமித்த அன்றிலிருந்து நாங்கள் இங்கு வந்து சென்றுகொண்டுதான் இருக்கிறோம். அந்த ஜீவராசிகளெல்லாம் சுத்த காட்டுமிராண்டிகள், வெறும் உணவுக்காகவும் புணர்ச்சிக்காகவும் அலைபவை... அப்போதெல்லாம் உங்கள் கிரகத்தின்பக்கம் நாங்கள் எப்போதாவதுதான் வருவதுண்டு.’

'ஆனால் மனிதர்களான நீங்கள் எப்போது நாகரிகமடைந்து, உணவு என்ற அடிப்படை விஷயத்தைத் தாண்டி உங்கள் அறிவைப் பயன்படுத்தினீர்களோ அப்போதிலிருந்தே நாங்கள் உங்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்.

‘நீங்கள் எங்களுக்கு நன்றி சொல்லவேண்டும் என்றது’... அதன் நண்பன்.

‘ஹா... மனீஷ்.... ஹவுவா விதி ௦௦9ன் படி, பெருமை பீற்றிக்கொள்வது......’

‘பீற்றிக்கொள்வது தப்பு..... பேசவில்லை...’

‘நன்றியா? எதற்கு?’ என்றேன்.

‘அதாவது மிருத்யுஞ்சய், உங்கள் மனித இனம் என்னதான் நாகரிகமாக வாழ்ந்தாலும், தங்களின் அறிவியல் சார்ந்த அறிவு வளர்வதற்கு நிறைய நூற்றாண்டுகள் பிடிக்கும் என எங்களின் முன்னவர்கள் நினைத்ததால், உங்களில் சில மனிதர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மட்டும் அவர்கள் அறியாமலேயே பல அறிவியல் சார்ந்த அறிவை நாங்கள் புகட்டினோம்.  உதாரணத்திற்கு... ஐசாக் ந்யூட்டன், ஐன்ஸ்டீன், எடிசன், நிகோலா டெஸ்லா... இன்னும் பல பேர். உங்கள் மொழிக்காரர்கள் கூட சிலர் உள்ளனர். சமீபத்தில், அவர் பெயர் என்ன??’

‘இராமனுஜன்... பொடியன்.... அந்த சின்ன பையனின் கணித கோட்பாடுகளை இன்னமும் வைத்து ஆராய்ச்சிகள் நடப்பதாக தெரிகிறது. மனிதர்கள் கணக்கில் மிக மோசம்!!’
‘என் நண்பன் கொஞ்சம் அதிகப் பிரசங்கிதான், ஆனால் கணக்கில் மனிதர்கள் நீங்கள் ரொம்பவே தத்திதான்.’

இது எனக்கும் கூட சரி என்றுதான் பட்டது! நான் கடைசியாக கணக்கில் வாங்கிய மார்க் நூறு.... இருநூறுக்கு..

‘பல்லாயிரம் ஆண்டுகளாக உங்களுக்கு நாங்கள் உதவி செய்து வந்தாலும், கிரெகோரியன் நாட்காட்டி கணக்குப்படி கடந்த 1920 முதல் 1930 வரை உங்களில் பலருக்கும் அறியல் சார் அறிவை நாங்கள் வழங்கியுள்ளோம். இன்றும்கூட அவ்வப்போது, உங்களுக்குத் தேவையான விஞ்ஞான அறிவை நாங்கள் உங்களுக்கு அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறோம்!’

‘அனால்... மனிதர்கள் சரியான பேராசைக்கார்கள்... இந்த விஞ்ஞானத்தை இந்த கிரகத்தின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தாமல், ஒன்றிற்கும் உதவாத இந்த சிறு கிரகத்தில் யார் சிறந்தவர்கள் என உங்களுக்குள் போட்டி. உங்களின் இனம் மட்டும் சொகுசாக வாழவேண்டும் என்ற பேராசை உங்களுக்கு. எங்கள் கிரகத்தை ஒப்பிடும்போது, உங்கள் கிரகம். ஆயிரத்தில் ஒரு பங்கில் ஒரு பங்கில் ஒரு பங்கு.....’

‘மீண்டும் இந்த தம்பட்டம் தேவைதானா?? அனால் அவன் சொல்வதில் நியாமுள்ளது. மனிதர்கள் நீங்கள் ரொம்பவும் மோசம். பதவி மோகம், ஆற்றல் ஆட்சி மீது மோகம் கொண்டவர்கள்.. அறிவை வைத்து இன்பமாக வாழத் தெரியாதவர்கள் நீங்கள். அதைவைத்து, அதன் பெயர் என்ன?..’

‘பணம்’

‘ஆம், அறிவியலைவைத்து எப்படி பணம் பண்ணலாம் எனப் பார்ப்பதே உங்களுக்கு வேலையாகி விட்டது. உங்களை விட அந்த காட்டுமிராண்டி மிருகங்கள் மேல் என இப்போது எங்களுக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது.’

‘விஞ்ஞானத்தால் உங்களின் வாழ்க்கை மேம்படும் என் நாங்கள் நினைத்தோம். அனால் நீங்களோ உங்களுக்குள்ளாகவே யுத்தம் செய்துகொண்டீர்கள். அது என்ன? உங்களில் சிலகோடி பேர் சேர்ந்து ஒரு அணியாக செயல்படுவீர்களே? அது என்ன அமைப்பு??’

‘நாடுகள்!!’

'ஆம்.  நாடுகள். ஹா ஹா ஹா ஹா. இருப்பதே ஒரு கடுகு போன்ற கிரகம். இதற்குள் இதைப் பல நாடுகளாக நீங்கள் பிரித்துக்கொண்டுப் பிரிவினைப் பாராட்டுவதைப் பார்த்தால் எங்களுக்கு மிகவும் சிரிப்பாகத்தான் உள்ளது. ஹா ஹா ஹா.... '

அதன் நண்பனும் சேர்ந்து எக்காளமிட்டு சிரிப்பொலித்தது. ‘அதனால்தான் உங்களின் இனத்தை அழிக்கவுள்ளோம்.’

எனக்குத் தூக்கி வாரிப்போட்டது!!!

‘மனீஷ், உளறுமண்டையனே! அதாவது மிருத்யுஞ்சய், அவன் சொன்னதை கேட்டுவிட்டாயா?’

‘எங்கள் இனத்தை அழிக்கப்போவதாக.....???’

‘ஹ, உனக்கு நல்ல கூர்மையான செவிகள்! சுற்றிவளைத்துப் பேச விரும்பவில்லை. ஆம் டைனோசர்கள் இவ்வுலகில் பல்கிப் பெருகி இருந்த போது, இப்படிப்பட்ட அறிவிலிகள் இருந்தென்ன பயனென்று ஒரு பெரும் விண்கல்லை செலுத்தி அவற்றை அழித்தோம். இப்போது மனிதர்களாகிய நீங்களே உங்கள் உலகத்தை அழிக்கவிருக்கிறீர்கள். அது எங்களுக்குப் பிடிக்கவில்லை, இக்கிரகம் சிறியதானாலும், அருமையானது. உயிர்கள் உருவாக பிரபஞ்சத்தில் ஏதுவாக உள்ள சில இடங்களில் இதுவுமொன்று. அதனால் இந்த கிரகத்தை உங்கள் இனம் அழிக்கமுற்படுவதை எங்களால் காண இயலாது. உங்கள் இனத்தை அழிப்பதை தவிர வேறு வழியே இல்லை எங்களுக்கு.’

‘ஆனால், நீங்கள் எங்களுக்கு உதவலாமே? ஏன் நீங்கள் எங்கள் உலக தலைவர்களுக்கு நல்லறிவைப் புகட்டக்கூடாது.’ 

‘ம்ச்ச் ச் ச்... காலம் கடந்துவிட்டது... ஏற்கனவே உங்களின் பல தலைவர்களுடன் நாங்கள் பேசிவிட்டோம். பலனில்லை.’ 

‘இதில் ஒரு தலைவர் ஒரு படி மேலே போய் உலகத்தை ஆக்கிரமிக்க நாங்கள் அவருக்கு உதவி செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார். ஹா ஹா ஹா... நல்ல தலைவர்கள்...’
திடீரென அந்த ஜந்துக்களின் கழுத்தில் இருந்த கடிகாரம் மீக் கீக் மீக் என சத்தமிட்டதைத் தொடர்ந்து...

‘ஹா!! எங்களுக்கு நேரமாகிவிட்டது. நாங்கள் புறப்பட வேண்டும். உன்னைப் பார்த்தால் உன் இனம் அழியப்போவதை நினைத்து வருத்தப் படுகிறாய் என நினைக்கிறேன்.
‘நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை’ என்று சொல்லியது ஒன்று. 

‘ஜோவேசோ.... இதை எப்போது கற்றாய்?... பேசிக்கொண்டே இரண்டும் அவைகளின் விண்கலத்தை நோக்கிச்சென்றன.

‘நி...நில்லுங்கள். இதற்கு தீர்வே கிடையாதா? எங்களுக்கு ஒரு வாய்ப்பில்லையா! இங்கு நல்லவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.’ என்றேன்.

‘மனதளவில் தங்களை எல்லோருமே நல்லவர்கள் என்றுதான் நினைக்கின்றீர்கள். ஆனால் செயலளவில்?’

அந்த கோளத்திற்குள் அவை சென்று மறைந்தன. கிரீச் என்ற சத்தத்துடன் தொடங்கி, அந்தக்கலம் மேலே மேலே மேலே சென்று மறைந்தது.

இரண்டு வாரங்கள் கழித்து...

"வரும் வெள்ளிக்கிழமையன்று பூமியை விண்கல் தாக்கவுள்ளதால் உலகமே அச்சத்தில் உறைந்துள்ளது. இதுகுறித்து உறையாற்றிய பாரதப் பிரதமர் திரு.."

டி வி யை ஆஃப் செய்தேன்.

தொட்டியில் இருந்த விண்கல் பற்றி அறிந்திராத குட்டி மீன்களுக்கு தாராளமாக உணவிட்டேன். ஊரிலுள்ள என் பெற்றோரைப் பாரக்கப் புறப்பட்டேன்.