குளிர்காலம் என்பதால் சீக்கிறேமே இங்கு இருட்டிவிட்டது. காடுகளின் சிறப்பம்சம் என்னெவென்றால், இரவில்தான் அவை உயிர்ப்பெறும். நாட்டிற்குள் கேட்டிராத நானாவித வினோத சப்தங்களும் எழும்பி நம் அடிவயிற்றில் படபடப்பை உருவாக்கும். இரவில் மட்டுமே வெளிவரும் வினோதமான பல மிருகங்கள், அழிந்துவிட்டது என நினைக்கப்படும் பல மிருகங்களையும் பற்றிய ஆராய்ச்சியில் நான் ஈடுபட்டுள்ளதால் இந்த காட்டிற்குள் வந்து தங்கியுள்ளேன். கடந்த மூன்று நாட்களாய் எல்லாம் சரியாகத்தான் இருந்தது, இருந்ததாகத்தான் நினைக்கிறேன். ஆனால் இன்று சாயங்கலாம், கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு ஒளிப்பிழம்பு வந்து இறங்குவதைக்கண்டேன். பின் தொடர்ந்தேன். வின்கல்லாக இருக்குமா?
தூரத்தில் மிக சிறியதாக இருந்த அந்த ஒளிக்கீற்றின் பக்கத்தில் செல்ல
செல்ல... அப்போது நான் பார்த்தது??!!?
வாழ்நாளில் என்னால் மறக்கமுடியாத காட்சியது. அரைக்கோளம். ஒன்றரை யானை
அளவிருக்கலாம். அந்தப் பெரிய கோளத்தின் அடிப்பகுதியில் ‘விர்ர்ர்ர்’ என சத்தமிட்டு
சுழழும் ஒரு தகடு போன்ற அமைப்பு. இரு உலோகக்கால்கள் போன்ற அமைப்பு அந்த வாகனத்தின்
உடலிலிருந்து நிலத்தின்மேல் ஊன்றி நின்றன. அதன் கதவு ‘விஷ்ஷ்’ என்ற சத்தத்துடன்
திறந்தது.
இரண்டு பச்சை நிற உருவங்கள், சுமார் மூன்று அடி உயரம், ஓடிசலான தேகம்,
நான்கு கைகள், கால்களில்லை, அமீபா போல ஊர்ந்து அந்த வாகனத்திலிருந்து வெளிவந்தன. கண்ணாடியால்
செய்யப்பட்ட முகமூடி போன்ற ஒன்றை அவை அணிந்திருந்தன. ஒரு மரத்தின் பின் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன்.
என் உடல் முழுவதும், வியர்வையில் தொப்பலாகியிருந்தது.
இறங்கிய இரண்டும் எனை நோக்கின. ஓட முயல்கிறேன்.. ஆச்சரியத்தில் என்
கால்கள் செயலிழந்துவிட்டன.
அதில் ஒரு ஜந்து என்னை நோக்கி 'மானுடா, இங்கே வா’, என்றது.
சத்தம்? வாய் அசையவில்லை... அவைகளுக்கு வாயேயில்லை! இயந்திரத்தனமான
குரல். எனக்குத் தலை சுற்றியது.
அவை எனை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக வரத்தொடங்கின. ஓட முயன்று, பின்னால்
ஒரு கட்டையில் இடறி மல்லாக்க விழுந்தேன். இதற்குள் அவை என்னிடம் வந்துவிட்டன.
மண்ணில் கையைத் துளாவி ஒரு மரக்கட்டையை ஆயுதமாக எடுத்துக்கொண்டேன்.
‘மானுடா.. பயப்படாதே’ என்றது அவற்றில் ஒன்று..
மினுமினு பச்சை நிறம், நான்கு கைகள், முற்றும் துறந்த முனிவர் போல ‘மானுடா‘
என அழைக்கும் பாங்கு.... பயப்படாமல்??
‘பக்கத்தில் வராதே...போய்விடுங்கள்...கொன்னுடுவேன்...... எனக்கு
கராத்தே தெரியும்...’ அதாவது, எனக்கு கராத்தே தெரியாதது அதற்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை.
இரு கைகளால் என் தோளைப்பற்றி மற்ற இரு கைகளால் என் காலைப்பற்றி
என்னைதூக்கி ஒரு செங்குத்தான மரத்தை நேரே நிறுத்துவது போல நிறுத்தியது.
‘இன்னொரு ஜந்து, பயப்படாதே.... நாங்கள் உன் தோழர்கள் என்றது.....’
அப்போதுதான் நினைத்தேன், அடச்சே இது ஒரு கனவு, விழித்துக்கொள்.. விழித்துக்கொள்....
முடியவில்லை..... நிஜம்தான்...
ஒருவேளை மோசமான கேண்டிட் கேமரா டிவி நிகழ்ச்சியாய் இருக்குமா.
எந்நேரத்திலும் அந்த பச்சைநிற ஆடைகளைக் களைந்துவிட்டு ‘அங்கே பாருங்கள் கேமரா’ எனக்
காட்டுவார்களா??
மூச்சிறைக்க....."நீ நீங்கள் யார்?....”
“நீங்கள் யார்? ஹ்ம்ம் நல்ல கேள்வி. உங்கள் மனித வழக்குப்படி உங்கள்
இனத்தவரை அடையாளம் கண்டுகொள்ள... அது என்ன?
ஆ... ‘பெயர்’. ‘பெயர்’ என்ற ஒரு அடையாளக் குறிப்பை கொண்டுள்ளீர்கள். ஆனால் நாங்கள் அப்படியல்ல, எங்களின் பிரத்தியேகக் குறியீடு எங்களின் வித்தியாசமான வாசனையே!"
அப்போதுதான் கவனித்தேன், என் இடது பக்கம் நின்றதின் மீது பெட்ரோல்
போன்ற வாசனை, வலது பக்கம் நின்றதின் வாசம்..... கிர்ணிப்பழமா??
தன் பக்கத்திலிருந்த ஜந்துவைப் பார்த்து ‘அட நண்பா, நுகர் அறிவு நுண்
அமைப்பைப் பற்றி அவனுக்கு எப்படித் தெரிய வாய்ப்புண்டு? சரி.. இது எந்த இடம்?’ என
வினவியது.
அதன் கூட்டாளி, தன் கழுத்தில் தொங்கிய ஒரு வண்ண வாட்ச் போன்ற பொருளைப் பார்த்து 11 டிகிரி 37 நிமிடங்கள் 0 நொடிகள் வடக்கு, 76 டிகிரி 34 நிமிடங்கள் 0 நொடிகள் கிழக்கு, என்றது.
‘ஓ தமிழ் நாடா??’ என்னைப்பார்த்து.. ‘பூமி
நண்பனே வேண்டுமென்றால் நீ என்னை, கொற்கைப் பாண்டியனென்றும், என் நண்பரை
செல்வேந்திர பூபதி என்றும் அழைக்கலாம். எங்களுடைய சிந்தனைபெயர்க்கும் கருவி தன்னாலே
இடத்திற்கு தகுந்தாற்போல், மொழிகளைப் பேசுமாறு மாறிக்கொள்ளும். எங்களின் பறக்கும்
கலனை தானியங்கி அமைப்பில் ஓடவிட்டு சிறிது ஓய்வெடுத்ததால், எந்த இடத்தில்
இறங்கினோம் என்பதை நான் கவனிக்கவில்லை’, என்றது.
பக்கத்திலிருந்த அதன் நண்பன் மீண்டும் அந்த
கழுத்துக் கடிகாரக் கணினியைப் பார்த்து, ‘வேண்டாம், பாண்டியர் பூபதி எல்லாம்
வேண்டாம். இப்போது ஆண்களுக்கு ராஜேஷ், சுரேஷ், ஹரிஷ் போன்ற பெயர்கள்தான்
இப்பகுதியில் அதிகம் புழக்கத்திலுள்ளன’ என்றது.
‘சரி சரி, என் பெயர் ராஜேஷ், என் நண்பர்
பெயர் அஜீஷ்...’
‘எனக்கு மனீஷ்தான் பிடித்துள்ளது....’
‘சரி உன் பெயர் மனீஷ், வைத்துக்கொள்.....’
இங்கே என்ன நடக்கிறது, என விளங்குவதற்கு,
எனக்கு சற்று நேரம் பிடித்தது.... வானத்திலிருந்து பச்சை நிறத்தில் ஒரு கோளம்
பூமியில் இறங்கி நான்கு கை கொண்ட இரு பச்சை நிற ஜந்துக்கள் இங்கு வந்து தங்களுக்குள்
பெயர் சூட்டிக்கொண்டு......
‘பூமி நண்பரே.... உங்கள் பெயர் என்ன?’
‘ம்.. ம...... மிருத்யுஞ்சய்’, என்றேன்.
‘ஓ.. மிருத்யுஞ்சய்..... சாவில்லாதவன் என
அர்த்தம்...’
‘ஜோவேசோ...ஜோவேசோ’... என்றன.
ஜோவேசோ??? அருமை என அர்த்தமா? இல்லை ரொம்ப சுமார்
என கிண்டல் செய்கின்றனவா?
‘யா யார் நீங்கள்? வேற்று கிரக வாசிகளா?‘
‘ஆம்... நாங்கள் பூமியிலிருந்து சுமார் 4
ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள நச்சத்திர மண்டலத்திலிருந்து வந்துள்ளோம்.’
‘எங்கள் கிரகத்திற்கு ஏன் வந்தீர்கள்?’
‘ஏனா? யாதும் கோளே... யாவரும் கேளீர்... என
நீ கேள்விப்பட்டதில்லையா?..’ என சிரித்தது. அதாவது தொலைக்காட்சி சிட்காம்களில்
வருவதுபோல் சிரிப்பொலி மட்டும் கேட்டது...
'இந்த பிரபஞ்சமே நம் வீடு, எங்குவேண்டுமானாலும்
செல்லலாமே!'
‘அஹ்ஹ்ஹ், பூமிவாசிகள்... குட்டிகிரகத்தில்
குதிரை ஓட்டுபவர்கள்’ என அதன் நண்பன் சலித்துக்கொண்டது.
‘அப்படியானால் வேற்று கிரக வாசிகள் இருப்பது
உண்மைதானா? பல வருடங்களாக உங்களைப்பற்றிய செய்திகள் வருவதெல்லாம்???’
சர்வசாதாரணமாக ‘ஆம்.... உண்மைதான்... உங்களின்
சூரியன் உருவாக ஆரம்பித்த போதே இந்த சூரியக்குடும்பதை எங்கள் இனம் கண்காணித்து வருகிறது.
முன்பெல்லாம் இந்த கிரகத்தில், பல பிராணிகள் முட்டாள்தனமாக சுற்றித்திரியும். சில நூற்றண்டுகளாகத்தான்
மனிதர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளீர்கள்’, என்றது.
மற்றொரு, ஜீவராசி, “இப்போதுதான் நீங்கள்
உங்களின் கிரகத்தைத்தாண்டி வெளியே வந்து உங்கள் சூரியக்குடும்பத்திலுள்ள கோள்களைப்
பற்றி ஆராயவே தொடங்கியிருக்க்கிறீர்கள். எங்களுக்கு இது நல்ல பொழுதுபோக்கு.”
‘உங்களுக்கு பொழுதுபோக்கா?’
‘உலகம் தொடங்கி, முதல் உயிரினம் இந்த
பூமியில் பரிணமித்த அன்றிலிருந்து நாங்கள் இங்கு வந்து சென்றுகொண்டுதான் இருக்கிறோம்.
அந்த ஜீவராசிகளெல்லாம் சுத்த காட்டுமிராண்டிகள், வெறும் உணவுக்காகவும்
புணர்ச்சிக்காகவும் அலைபவை... அப்போதெல்லாம் உங்கள் கிரகத்தின்பக்கம் நாங்கள் எப்போதாவதுதான்
வருவதுண்டு.’
'ஆனால் மனிதர்களான நீங்கள் எப்போது நாகரிகமடைந்து,
உணவு என்ற அடிப்படை விஷயத்தைத் தாண்டி உங்கள் அறிவைப் பயன்படுத்தினீர்களோ
அப்போதிலிருந்தே நாங்கள் உங்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்.
‘நீங்கள் எங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்
என்றது’... அதன் நண்பன்.
‘ஹா... மனீஷ்.... ஹவுவா விதி ௦௦9ன் படி, பெருமை
பீற்றிக்கொள்வது......’
‘பீற்றிக்கொள்வது தப்பு..... பேசவில்லை...’
‘நன்றியா? எதற்கு?’ என்றேன்.
‘அதாவது மிருத்யுஞ்சய், உங்கள் மனித இனம்
என்னதான் நாகரிகமாக வாழ்ந்தாலும், தங்களின் அறிவியல் சார்ந்த அறிவு வளர்வதற்கு
நிறைய நூற்றாண்டுகள் பிடிக்கும் என எங்களின் முன்னவர்கள் நினைத்ததால், உங்களில்
சில மனிதர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மட்டும் அவர்கள் அறியாமலேயே பல அறிவியல்
சார்ந்த அறிவை நாங்கள் புகட்டினோம்.
உதாரணத்திற்கு... ஐசாக் ந்யூட்டன், ஐன்ஸ்டீன், எடிசன், நிகோலா டெஸ்லா... இன்னும்
பல பேர். உங்கள் மொழிக்காரர்கள் கூட சிலர் உள்ளனர். சமீபத்தில், அவர் பெயர் என்ன??’
‘இராமனுஜன்... பொடியன்.... அந்த சின்ன
பையனின் கணித கோட்பாடுகளை இன்னமும் வைத்து ஆராய்ச்சிகள் நடப்பதாக தெரிகிறது.
மனிதர்கள் கணக்கில் மிக மோசம்!!’
‘என் நண்பன் கொஞ்சம் அதிகப் பிரசங்கிதான்,
ஆனால் கணக்கில் மனிதர்கள் நீங்கள் ரொம்பவே தத்திதான்.’
இது எனக்கும் கூட சரி என்றுதான் பட்டது! நான்
கடைசியாக கணக்கில் வாங்கிய மார்க் நூறு.... இருநூறுக்கு..
‘பல்லாயிரம் ஆண்டுகளாக உங்களுக்கு நாங்கள்
உதவி செய்து வந்தாலும், கிரெகோரியன் நாட்காட்டி கணக்குப்படி கடந்த 1920 முதல் 1930 வரை உங்களில் பலருக்கும் அறியல் சார் அறிவை
நாங்கள் வழங்கியுள்ளோம். இன்றும்கூட அவ்வப்போது, உங்களுக்குத் தேவையான விஞ்ஞான
அறிவை நாங்கள் உங்களுக்கு அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறோம்!’
‘அனால்... மனிதர்கள் சரியான பேராசைக்கார்கள்...
இந்த விஞ்ஞானத்தை இந்த கிரகத்தின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தாமல், ஒன்றிற்கும்
உதவாத இந்த சிறு கிரகத்தில் யார் சிறந்தவர்கள் என உங்களுக்குள் போட்டி. உங்களின்
இனம் மட்டும் சொகுசாக வாழவேண்டும் என்ற பேராசை உங்களுக்கு. எங்கள் கிரகத்தை
ஒப்பிடும்போது, உங்கள் கிரகம். ஆயிரத்தில் ஒரு பங்கில் ஒரு பங்கில் ஒரு பங்கு.....’
‘மீண்டும் இந்த தம்பட்டம் தேவைதானா?? அனால்
அவன் சொல்வதில் நியாமுள்ளது. மனிதர்கள் நீங்கள் ரொம்பவும் மோசம். பதவி மோகம்,
ஆற்றல் ஆட்சி மீது மோகம் கொண்டவர்கள்.. அறிவை வைத்து இன்பமாக வாழத் தெரியாதவர்கள்
நீங்கள். அதைவைத்து, அதன் பெயர் என்ன?..’
‘பணம்’
‘ஆம், அறிவியலைவைத்து எப்படி பணம் பண்ணலாம்
எனப் பார்ப்பதே உங்களுக்கு வேலையாகி விட்டது. உங்களை விட அந்த காட்டுமிராண்டி
மிருகங்கள் மேல் என இப்போது எங்களுக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது.’
‘விஞ்ஞானத்தால் உங்களின் வாழ்க்கை மேம்படும்
என் நாங்கள் நினைத்தோம். அனால் நீங்களோ உங்களுக்குள்ளாகவே யுத்தம்
செய்துகொண்டீர்கள். அது என்ன? உங்களில் சிலகோடி பேர் சேர்ந்து ஒரு அணியாக
செயல்படுவீர்களே? அது என்ன அமைப்பு??’
‘நாடுகள்!!’
'ஆம்.
நாடுகள். ஹா ஹா ஹா ஹா. இருப்பதே ஒரு கடுகு போன்ற கிரகம். இதற்குள் இதைப் பல
நாடுகளாக நீங்கள் பிரித்துக்கொண்டுப் பிரிவினைப் பாராட்டுவதைப் பார்த்தால் எங்களுக்கு
மிகவும் சிரிப்பாகத்தான் உள்ளது. ஹா ஹா ஹா.... '
அதன் நண்பனும் சேர்ந்து எக்காளமிட்டு சிரிப்பொலித்தது.
‘அதனால்தான் உங்களின் இனத்தை அழிக்கவுள்ளோம்.’
எனக்குத் தூக்கி வாரிப்போட்டது!!!
‘மனீஷ், உளறுமண்டையனே! அதாவது மிருத்யுஞ்சய்,
அவன் சொன்னதை கேட்டுவிட்டாயா?’
‘எங்கள் இனத்தை அழிக்கப்போவதாக.....???’
‘ஹ, உனக்கு நல்ல கூர்மையான செவிகள்!
சுற்றிவளைத்துப் பேச விரும்பவில்லை. ஆம் டைனோசர்கள் இவ்வுலகில் பல்கிப் பெருகி
இருந்த போது, இப்படிப்பட்ட அறிவிலிகள் இருந்தென்ன பயனென்று ஒரு பெரும் விண்கல்லை
செலுத்தி அவற்றை அழித்தோம். இப்போது மனிதர்களாகிய நீங்களே உங்கள் உலகத்தை
அழிக்கவிருக்கிறீர்கள். அது எங்களுக்குப் பிடிக்கவில்லை, இக்கிரகம் சிறியதானாலும்,
அருமையானது. உயிர்கள் உருவாக பிரபஞ்சத்தில் ஏதுவாக உள்ள சில இடங்களில் இதுவுமொன்று.
அதனால் இந்த கிரகத்தை உங்கள் இனம் அழிக்கமுற்படுவதை எங்களால் காண இயலாது. உங்கள்
இனத்தை அழிப்பதை தவிர வேறு வழியே இல்லை எங்களுக்கு.’
‘ஆனால், நீங்கள் எங்களுக்கு உதவலாமே? ஏன்
நீங்கள் எங்கள் உலக தலைவர்களுக்கு நல்லறிவைப் புகட்டக்கூடாது.’
‘ம்ச்ச் ச் ச்... காலம் கடந்துவிட்டது...
ஏற்கனவே உங்களின் பல தலைவர்களுடன் நாங்கள் பேசிவிட்டோம். பலனில்லை.’
‘இதில் ஒரு தலைவர் ஒரு படி மேலே போய் உலகத்தை
ஆக்கிரமிக்க நாங்கள் அவருக்கு உதவி செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார். ஹா ஹா
ஹா... நல்ல தலைவர்கள்...’
திடீரென அந்த ஜந்துக்களின் கழுத்தில் இருந்த
கடிகாரம் மீக் கீக் மீக் என சத்தமிட்டதைத் தொடர்ந்து...
‘ஹா!! எங்களுக்கு நேரமாகிவிட்டது. நாங்கள்
புறப்பட வேண்டும். உன்னைப் பார்த்தால் உன் இனம் அழியப்போவதை நினைத்து வருத்தப்
படுகிறாய் என நினைக்கிறேன்.
‘நில்லாத வற்றை
நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை’
என்று சொல்லியது ஒன்று.
‘ஜோவேசோ.... இதை
எப்போது கற்றாய்?... பேசிக்கொண்டே இரண்டும் அவைகளின் விண்கலத்தை நோக்கிச்சென்றன.
‘நி...நில்லுங்கள்.
இதற்கு தீர்வே கிடையாதா? எங்களுக்கு ஒரு வாய்ப்பில்லையா! இங்கு நல்லவர்கள் இன்னமும்
இருக்கிறார்கள்.’ என்றேன்.
‘மனதளவில் தங்களை எல்லோருமே
நல்லவர்கள் என்றுதான் நினைக்கின்றீர்கள். ஆனால் செயலளவில்?’
அந்த கோளத்திற்குள்
அவை சென்று மறைந்தன. கிரீச் என்ற சத்தத்துடன் தொடங்கி, அந்தக்கலம் மேலே மேலே
மேலே சென்று மறைந்தது.
இரண்டு வாரங்கள் கழித்து...
"வரும் வெள்ளிக்கிழமையன்று பூமியை விண்கல் தாக்கவுள்ளதால் உலகமே அச்சத்தில் உறைந்துள்ளது. இதுகுறித்து உறையாற்றிய பாரதப் பிரதமர் திரு.."
டி வி யை ஆஃப் செய்தேன்.
தொட்டியில் இருந்த விண்கல் பற்றி அறிந்திராத குட்டி மீன்களுக்கு தாராளமாக உணவிட்டேன். ஊரிலுள்ள என் பெற்றோரைப் பாரக்கப் புறப்பட்டேன்.
இரண்டு வாரங்கள் கழித்து...
"வரும் வெள்ளிக்கிழமையன்று பூமியை விண்கல் தாக்கவுள்ளதால் உலகமே அச்சத்தில் உறைந்துள்ளது. இதுகுறித்து உறையாற்றிய பாரதப் பிரதமர் திரு.."
டி வி யை ஆஃப் செய்தேன்.
தொட்டியில் இருந்த விண்கல் பற்றி அறிந்திராத குட்டி மீன்களுக்கு தாராளமாக உணவிட்டேன். ஊரிலுள்ள என் பெற்றோரைப் பாரக்கப் புறப்பட்டேன்.