Saturday, 14 May 2016

விளையாட்டு

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கவேண்டும்?

காலையில் எழும்போது தூக்கக்கலக்கத்தில் சுவற்றில் முட்டி, அதானால் வந்த கோபத்தில் ஆத்திரமாக பல்தேய்க்கப்போய், பிரஷ் ஈறில் மோதி, இதனால் மேலும் ஆத்திரம் அடைந்து காலை சுவரின்மேல் உதைத்துத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என நிரூபித்து... ச்சே.

வாசலில் பாலும் வரவில்லை, பேப்பரும் வரவில்லை. ஆத்திரமாக உள்ளே சென்று கடிகாரத்தைப் பார்த்தேன், மணி 7.00. காலையில் முதலில் சுவரைப் பார்க்கும்போதும் 7 ஆகத்தான் இருந்தது. பாட்டரியின் சாவு. 

அவசரமாக  செல்போனை எடுத்துப் பார்த்ததில், ஹாங்காகித் தொலைத்தது அந்த கம்மி RAM சனியன். ஐநூற்றி அறுவத்து ஆறு முறை ஸ்க்ரீனை தேய்த்து, ‘உன்னால் முடியும்என ஊக்கமளித்தும் வேலை செய்யாததால் அதன் பிறப்பைப்பற்றி கெட்ட வார்த்தைகளால் திட்டியதும் ரோசம் வந்து 7.50.. காட்டி 'வேலைக்கு சரியான நேரத்திற்கு முடிந்தால் போ பார்க்கலாம்' என நக்கலியது. 

இரயிலை நேரத்தில் பிடிக்க குளிக்கவேண்டிய அவசியமில்லை என்பதால் அவசரமாக பேன்ட் சர்ட் அணிந்துகொண்டு ஸ்டேஷனுக்கு ஓடினேன். இரயில் சரியான நேரத்திற்கு வந்து சென்றது சற்று அமானுஷ்யமாய் இருந்தது. 

அடுத்த இரயில் வர இன்னும் 10 நிமிடங்கள் ஆகும். 10 நிமிடங்களுக்குள்
சுமார் 2500 குழந்தைகள் பிறக்கின்றன, 3600 முறை பூமியை மின்னல் தாக்குகிறது, 1160 பேர் திருமணம் செய்துகொள்கின்றனர், இதையெல்லாம்விட முக்கியம், 10 நிமிடம் தாமதித்தால் சிடுமூஞ்சி சொட்டை பாஸ் ஆஃபீசுக்கு எனக்குமுன்னே வந்துவிடுவார் என்பது பயங்கரமான ஒரு புள்ளிவிவரம்.

ஆடி அசைந்து வந்த இரயிலில் முந்திக்கொண்டு சீட் பிடிக்க அனைவரும் ஓட, பச்சை சட்டை ஒருவர் லாவகமாக தன் கைக்குட்டையை ஜன்னளுக்குள் வீசி சீட் பிடித்தது, அந்தக் கைக்குட்டையை யாரோ ஒருவர் தூக்கி எறிந்துவிட்டு அந்த சீட்டில் உட்கார்ந்ததால் பச்சை சட்டைக்கும் கர்ச்சீப்-உதாசீன புருஷருக்கும் நடந்த சண்டையில் ஏனோ கைதவறி என் சட்டைப் பாக்கெட் கிழிந்தது, கிழிந்த சட்டையை மறைக்க நெஞ்சுவலி வந்தவன் போலோ காதலின் விழுந்தவன் போலோ வலது கையால் இட மார்பை மூடிக்கொண்டு நான் ஆபீஸ் வந்து சேர்ந்ததையெல்லாம் கூறினால் நீங்கள் சிரிக்கலாம், அனுதாபமும் படலாம்.

உள்ளே நுழைந்து லெட்ஜரில் கையெழுத்திட்டுவிட்டு காபின் பக்கம் பூனைபோல் போன எனக்கு காத்திருந்தது ஆஃபீஸ் பாய் ரூபத்தில் வந்த அந்த அழைப்பு.

சார், எம்.டி நீங்க வந்தவுடனே உங்கள அவர வந்து பாக்க சொன்னார்.

எனக்கு இந்த ஆஃபீசில் பிடிக்காதது இரண்டு. முதலாவது  என் மேனேஜிங் டைரக்டர். இரண்டாவதும் முதலாவதுதான். 

பவ்யமாக அவர் அறையின் கதவைத் தள்ளி, "எக்ஸ்யூஸ் மீ சார். மே ஐ....

ம்ம்ம்ம்

40 வயதில், தலையிலிருந்து கீழே விழலாமா வேண்டாமா என நினைக்கும் டையடிக்கபட்ட மயிறும், கடம் போன்ற வயிறும், தூரப்பபார்வைக்காக கண்ணாடி அணிந்துள்ள சிரசும் சேர்த்து ஐந்தடி உருவமாய் கருப்பு (கரும்பச்சையாகக் கூட இருக்கலாம்) கோட்டணிந்து எம்.டி. வீற்றிருந்தார். அறையில் அதிகார வாசனை வீசியது.

குட் மார்ன்....முடிப்பதற்குள்,

மிஸ்டர் கிஷன், யு ஆர் ஃபையர்ட்

ரொம்ப கேவலமான ஜோக்கென்று உதாசீனப்படுத்தியிருப்பேன் வேறு யாராயிருந்தாலும். எம்.டி. யிடம், இந்த எம்.டி. யிடம் கண்டிப்பாகக் கூற முடியாது.

22 டிகிரியில் கண்டிஷன் ஆகியிருந்த காற்றிலும் வந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டு, “சாரி சார், தீடீர்னு என்ன?.....  ஐ வாஸ் லேட் டுடே பட் ஐ ஹேவ் ரீசன்ஸ். என் சட்டையைப் பாருங்கள், காலை இரயிலில்...

ஐ டோன்ட் கேர் எ ஷிட் அபௌட் யூர் ரீசன்ஸ். போர்டு மீட்டிங் நடந்து 60 மணி நேரமாவுது. உன்கிட்ட பினான்சியல் ரிசல்ட்ஸ் காப்பி குடுத்து பேப்பர் விளம்பரத்துக்கு அனுப்ப சொன்னேனே? ஏன் பன்னல? தண்டம் நீயா கட்டப்போற? அட பெனால்டி போனா போதுய்யா. பட் டோன்ட் யு ஹேவ் தி டிசிப்ளின். ஒரு சின்ன வேலைய முடிக்க துப்பில்ல. இது முதல் தடவை கிடையாது. இதுக்கு முன்னரும் ஒரு தரம்.... தினமும் லேட்டா வர்றது. தினம் ஒரு நொண்டி சாக்கு. எதாவது ஒன்னு சொல்லி இதுல லீவு வேற பத்து நாளக்கி ஒரு தரம். 

ஐ யம் டோட்டல்லி ஃபெட் அப் வித் யூர் ஆட்டிட்யூட். வெய்ட்.... கெட் லாஸ்ட். ஜஸ்ட் கெட் லாஸ்ட். ஐ டோன்ட் வான்ட் யு இன்சைட் மை ஆபிஸ்." என்று வாயில் எச்சில் தெறிக்க நூறு டெசிபெல்லில் கோபப்பட்டார்.

அவமானம் வலித்தது.

அவுட்பாக்சில் மெயில் மாட்டிகொண்டுவிட்டது, அதனால் தகவல் அட்வர்டைசிங் ஏஜென்சிக்கு செல்லவில்லை என்று சொல்லேண்டா முண்டம். பேசாமல் இருப்பதைவிட எதாவது பேசி வேலையைத் தக்கவைத்துக்கொள்' என இந்த சம்பவத்தை அவசரகாலமாக பாவித்து மூளை சில மட்டமான யோசனைகளைக் கூறினாலும், இன்ட்ரோவர்ட்களுக்கே உரிய  நாணத்தோடும் நாணயத்தோடும், கடந்த மூன்று நிமிடம்வரை 'என் ஆபீஸ்' என நான் நினைத்துக்கொண்டிருந்த அந்த இடத்திலிருந்து கிளம்பினேன்.

அவசரமாக வந்ததால் காலையில் இராசி பலன் பார்க்கவில்லை. விருச்சிகத்துக்கு இன்னக்கி சந்திராஷ்டமமோ?’ என யோசித்துக்கொண்டே முகமெல்லாம் வேர்த்து, அடுத்து என்ன செய்வது எனத்தெரியாது சாலையில் நடந்துகொண்டிருக்க, கைப்பேசியில் ஒரு குறுஞ்செய்தி, அவளிடமிருந்து. வேலை போனதைச் சொல்லி ஆறுதல் தேடலாம் என நினைத்து, அந்த பரிதாபத்திலும் கொஞ்சம் ஆவலாய் மெஸ்ஸேஜய்ப் படித்தேன். அதை முழுவதும் படித்துக்காட்டினால் நீங்களும் அழுதுவிடக்கூடும். 

ப்ரேக் அப்!!!

நீண்ட செய்தி ஒன்று வேறு யாருக்கோ எழுதுவதுபோல் எழுதி, 'எனை இனி தொடர்புகொள்ள வேண்டாம்'  என முடிந்திருந்தது. எழுத்துப் பிழைகளோடு இருந்தாலும் (என்ன அவசரமோ) அவை சொல்லவந்தது புரிந்தது. இது இன்றைய நாளின் மேலும் ஒரு அடி, எதிர்பாராதபோது வந்தது, எதிர்பார்க்கவே இயலாதது, மிக பலத்த ஒன்று!

சாலையோரம் இருந்த பார்க் ஒன்றில் உட்கார்ந்தேன், அந்நேரத்திலும் அங்கு ஜோடிகள். எவ்வளவு சந்தோஷம் அவர்களிடையில்! இருவருக்கும் வேலையும் இருந்து கல்யாணமும் செய்துகொள்வார்கள் போல! ரஞ்சனி இப்படி செய்வாள் என....

அடச்சே என்ன இது? இப்படிப் பிதற்ற ஆரம்பித்து விட்டேனே. இதற்கெல்லாம் காரணம்? 'பிளடி பிட்ச்', என உடனே வில்லனாக மாறும் மெலோடிரமாட்டிக் ஆசாமியல்ல நான்.  

பார்க்கில் இருந்து கிளம்பி, இந்த நாள் எனக்கு நடந்த கொடுமைகளை நினைத்துக்கொண்டே ரோட்டில் செல்கையில், சிந்தை தடுமாறி  ஒரு பேருந்திற்கும், காருக்கும், ஆட்டோ ரிக்ஷாவிற்கும்,  ஐஸ் வண்டி தாத்தாவிற்கும் நடுவில் மாட்டி,  ஒரு நொடி அனைவரையும் கதிகலங்கவைத்து... 

உயிரோடுதான் இருந்தேன்... 

'சாவுகிராக்கி, தேவடியா மவனே, வேற எங்காவது போய் சாவ வேண்டியது தானேடா!" 
அப்போதுதான் முடிவு செய்தேன்.

வீட்டுக்குள் நிழைந்தபோது, ஏழு மணி காட்டியது கடிகாரம். நல்ல கணம் தாங்கக் கூடிய நீண்ட துண்டை எடுத்து ஃபேனில் மாட்டி, கீழே விழுந்தால் அடிபடும் என எண்ணி பளு தாங்குமா என இழுத்துப் பார்த்துக்கொண்டேன். இப்பொழுது அந்த பச்சை நிற டவல் ஆபரணமாய் என் கழுத்தில். 

வெளியில் எங்கோ வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்என எனக்கேற்றாற்போல் பாடல் ஒலித்தது.

ஒரு நிமிடம் தடுமாறினேன்.

இருந்தாலும், எப்படி ஒரே நாளில் ஒருவன் எழும்போதே சுவரில் மோதிக்கொண்டு, இரயிலைத் தவறவிட்டு, சட்டை கிழிபட்டு, வேலை போய், காதல் தோல்வியடைந்து...... ச்சே...
கீழே ஸ்டூலை உதைத்துத் தொங்கினேன்.

தூக்குப்போட்டு தற்கொலை செய்ய நான் யாருக்கும் பரிதுரைக்க மாட்டேன், ரொம்ப சிரமம். மூளைக்கு செல்லும் இரத்தம், பிராணவாயு தடைப்பட்டு இருவது நொடிகளில் செரிப்ரல் ஹைபோக்ஸியா நேர்ந்து......... இறந்தேன்.

சிரிப்பு சத்தம். கொஞ்ச நஞ்சமல்ல. எக்காள சிரிப்பு சத்தம். அட இது என்ன? இறந்த பிறகு!!!.....

ஆவிகள் போன்ற உருவங்கள் பேசிக்கொண்டன: ஹா ஹா ஹா ஹா. மீண்டுமா?”

ஆம். ஹா ஹா ஹா

அட முட்டாளே! சரி, எத்தனை ஆண்டுகள் தாக்குப்பிடித்தான்?”

“25”

ஃபூ, வெறும் 25 தனா?”

இந்தக் குரல்களெல்லாம், இது என்ன எமலோகமா?

சரி அவனின் நினைவு ரிவர்சரை ஆன் செய். செத்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருப்பான்.

இதோஎனக் கூறி ஒரு உருவம் என்னை விட்டு விலகிச்சென்றது.

தலையில் அருவி நீர் பாய்ந்ததைப் போல இருந்தது. கொஞ்சம் வலித்தது.

ல் லா ம்   நி னை வு க் கு  ந் து. வந்தது.... 

ஐயோ, என்ன ஆனது.  ஸ்டேன்டிங்க்ஸ் என்ன? வென்றுவிட்டேனா?” என்றேன்.

ஸ்டேன்டிங்ஸா? ஹா ஹா ஹா! செத்துப்போயிட்டே!.. அதுவும் சூசைட். இப்போதான் கால்குலேஷன் நடக்குது. சோம்பேறித்தனம், பிரச்சனைகளைக் கையாளுவதில் சொதப்பல், தற்கொலை வேறு. கண்டிப்பா மைனஸ் அறுவது ஆயிருக்கும். ஹா ஹா ஹா.

அடச்சே.

புள்ளிப் பட்டியலைப் பார்த்தேன். 

1. யுக்தா: பாசிடிவ், 55, பலம்
2. கீர்வின்: பாசிடிவ், 43, மிதம்
3. மனிதன்: டெட், ஸ்கோர் கால்குலேட் செய்யப்படுகிறது, இறப்பு.

'அடச்சே! யுக்தா 55 ? போச்சு. போச்சு.. முதல் இடம் கிடைக்காது.'

அறையில் இருந்த மானிட்டர், "மனிதன்: படிநிலை இரண்டு, மொத்த புள்ளிகள் 103. தண்டம் -  தற்கொலைக்கு 40 , பிரச்சனையை எதிர்கொள்ளாததற்கு 30. இறுதி புள்ளிகள்: 33.

ஓ எழுவது பாய்ண்ட்ஸ் போச்சா? அறுவதுதான் போகுமென நினைத்தேன்!என்றான் என் நண்பன்.

நோ நோ நோ.... ச்சே.

சென்ற முறையைவிட இம்முறை நன்றாகவே விளையாடினாய். கடினமான தருணங்களில் உன்னுடைய எதிர்கொள்ளல்கள் அருமை. ஆனால் எப்போது காதல் தோல்வி வந்ததோ, அப்போதே, உன் எனெர்ஜி லெவல்கள் குறைந்துவிட்டன. இந்த வெர்ஷனில் காதல் தோல்வி வரும் இடங்கள், படு அற்புதமாக ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளன. மீள்வது ரொம்பக் கஷ்டம்.

பேசாதே. எல்லாம் உன்னால்தான். நான் தற்கொலை செய்யும்போது நீ எனக்கு ஏன் உதவி செய்யவில்லை?”

ஹா ஹா ஹா, உதவி செய்யவில்லையா? தற்கொலைக்குமுன் அந்த பாடலை ஒலிக்கச் செய்தது யார் என நினைக்கிறாய்?”

மீண்டும் ஒரு லைஃப் போய்விட்டதே என்ற ஆதங்கத்தில் இருந்தேன். 

மீண்டும் விளையாடுகிறேன். இம்முறை கண்டிப்பாக ஜெயிப்பேன்.

க்யூ-ஸி லைவ் கியரை என் மேல் மீண்டும் பொருத்தினேன்.  என்னதான் புது வெர்ஷன் என்றாலும் இதன் அறிமுக உரையை விட்டுத்தள்ளும் செய்யும் வசதி இதில் இல்லையென்பது ஒரு பின்னடைவு. கன்சோல் பேச ஆரம்பித்தது.

"மிக்கடோஸ்-இன் வர்ச்சுவல் கன்சோல் உங்களை வரவேற்கிறது. மல்டிவர்சின் மிகச்சிறந்த வர்ச்சுவல் கேமிங்க் "வாழ்க்கை விளையாட்டு”, வெர்ஷன் மூன்று. வீரர் பெயர்: மனிதன். தற்போதைய நிலை: மூன்றாம் இடம்.

விளையாட்டின் லெவல் 1: குழந்தை. குழந்தையாக இருக்கும் வரை உங்களுக்கு இது ஒரு விளையாட்டு என்பது தெரியும்.

லெவல் 2: இளமை. கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் மெய்நிகர் அமைப்பு உண்மை என நம்பி வாழ்க்கை விளையாட்டில் ஆழ்ந்து போவீர்கள்.

லெவல் 3: முதுமை. முதுமைப் பருவம் மிக முக்கியமானது. விளையாட்டின் மிகக் கடினமான பகுதி இதுதான். உங்களுடைய அனுபவம் என்னும் புள்ளிகளை வைத்து இந்த லெவலில் விளையாடினால் மட்டுமே நீங்கள் வெற்றி பெறலாம்.

நீண்ட நேரம் விளையாடி வெற்றி பெற இந்த வழிமுறைகளை பின்பற்றவும். விளையாட்டில் உங்களின் சக்திகளாக தொடுதல், சுவைத்தல், நுகர்தல், பார்த்தல் மற்றும் கேட்டல் என முறையே ஐந்து புலன்களும் அவைகளை முறையாக ஆக்டிவேட் செய்ய, யோசிப்பதற்கு ஆறாம் அறிவான மனமும் கொடுக்கப்பட்டுள்ளன. இவையனைத்தையும் சரியாக பயன்படுத்தி உண்மையானது எது என நீங்கள் தீவிரமாக சிந்திக்கும் பட்சத்தில் இந்த வர்ச்சுவல் என்விரான்மென்ட் கலைந்து, ஆட்டத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

மேலும், கேமில் அழுந்தி, பொய், பொறாமை, கோபம், கொலை என நீங்கள் செய்யும் விஷமங்களுக்கு அபராதம் உண்டு.

இந்த விதிமுறைகளை ஆயிரமாவது முறையாகக் கேட்கிறேன்.

இருந்தும் நீ ஒரு தடவை கூட வென்றதில்லையே! ஹா ஹா ஹா

கன்சோல்: விளையாட்டில், மிக மோசமான கட்டங்களை சமாளிக்க உங்களின் வழிகாட்டி நண்பர் உங்களுக்கு உதவுவார். உங்கள் வழிகாட்டியாக நீங்கள் தேர்வு செய்யும் நண்பர்?”

நண்பன் பெயர் கடவுள்’.”

நானேதான்என் பக்கத்தில் நின்ற கடவுள்அவனின் க்யூ-சி கியரை தலையில் பொருத்திக்கொண்டு என் பக்கத்தில் அமர்ந்தான்.

இந்த விளையாட்டில் உங்களின் வழிகாட்டி கடவுள். இனி கடவுள் உங்களுக்கு உதவுவார்.

நன்றாய் உதவுவார். உன் ஸ்பெஷல் அமைப்புகளைப் பயன்படுத்தி உன் பெருமைகளை அந்த மெய்நிகர் அமைப்பில் பரவச் செய்வது உனக்கு கொஞ்சம் அதிகப்படியாக படவில்லையா? வர்ச்சுவல் என்விரான்மென்ட் முழுக்க எங்கு பார்த்தாலும் ஆலயங்கள், பூஜை புனஸ்காரம். யு நார்சிஸ்ட்.

ஹா ஹா ஹா, என்ன செய்வது? பழைய வெர்ஷன்களில் விளையாடி பழகிவிட்டது. ஆனால் அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இந்த வெர்ஷனில் போட்டியின் கடினத்தன்மை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், என்னதான் உனக்கு போதித்தாலும், நான் உருவாக்கும் வர்ச்சுவல் அறிவுரைகள் உன்னைவந்து சேர்வது கொஞ்சம் கஷ்டம்தான்.

உனக்கு சுலபமாக இருக்கட்டும் என சில முக்கிய அறிவை நான் மதம் என்ற அமைப்பின் மூலம் வழங்கினால், அதே அமைப்பை ரெப்ளிகட் செய்து தவறான விதிமுறைகளைப் புகுத்தி இந்த கன்சோல் விளையாட்டை மேலும் கடினமாக்குகிறது.

உண்மையைக் கண்டுபிடிப்பதே இந்த விளையாட்டு என்பதால், நிஜம் எது என சிந்திக்கும் திறனை உன்னுள் அதிகரிக்க அறிவியல் என்ற அமைப்பை உருவாக்கினால், ஏற்கனவே நான் அமைத்த மதத்திற்கும்இந்த அறிவியலுக்கும்பேதங்களை ஏற்படுத்தி கேம் குழப்பம் செய்கிறது. உண்மையாகவே இந்த வெர்ஷனின் ப்ரோக்ராமிங் மிக மிக அருமை. டெவலப்பிங் மற்றும் டெஸ்டிங் டீம் பக்ஸ் எதுவும் இல்லாமல் இருக்க நிறைய மெனக்கட்டிருக்கிறார்கள்!

இருவரும் பேசிக்கொண்டே இருப்பது கன்சோலிற்கு பிடிக்கவில்லை என நினைக்கிறேன்; இப்படி கேட்டது:

விளையாட நீங்கள் தயாரா?’

இருவரும்: தயார்

கன்சோல் கவுண்டவுன்களைக் கொடுக்க ஆரம்பித்தது. அறுவது.... ஐம்பத்தி ஒன்பது...

வெர்ஷன் 3ன் விதிமுறைகளை இப்போது நன்றாக படித்துவிட்டேன். இண்டெலிஜென்ஸ் அமைப்பிற்கு முக்கியம் உன் ஸ்பெஷல் பவாரான மனதை சரியாகப் பயன்படுத்துவதுதான். கன்சோல் அறிமுக உரையின்போது சொன்னது 5 புலன்கள் மற்றும் கூடுதலாக மனம் என்கிற 6 சக்திகள்தான். அனால் நீ வெற்றி பெறுவதற்கு அதில் சொல்லாத பவர் ஒன்று உண்டு.

நிஜமாகவா. அது என்ன?”

ஹா..... சொன்னாலும் வர்ச்சுவல் என்விரான்மென்டுக்குள் நுழைந்த பிறகு அது உனக்கு நியாபகம் இருக்கவா போகிறது

இருந்தாலும் சொல்கிறேன். முக்கியமான தருணங்களில் நல்லது கெட்டது. அதாவது, விளையாட்டை ஜெயிக்க தேவையானது தேவையில்லாது எது என உணர்ந்து செயல்படும் புத்தி. விழிப்புணர்வு.

வாவ்... முக்கியமான தருணங்களில் நாம் எடுக்கும் முடிவு. அப்சொலூட்லி. விழிப்புணர்வை எப்படி விளையாடும்போது எனக்கு அனுப்புவாய்?”

கேமில் அதற்கு வழியில்லை. நான் உனக்கு எவ்வளவு உதவினாலும் வெற்றியை உறுதி செய்யும் இந்த க்ரிடிகலான சக்தியைப் பயன்படுத்தும் சுதந்திரம் உனக்கு மட்டுமே உண்டு. உண்மையில் இந்த விளையாட்டின் நோக்கமே அது தான். உன்னுடைய முடிவுகள் உன் கையில்!

வாவ்... பீஸ் ஆஃப் ஆசம் ப்ரோக்ராமிங் கடவுளே!

ஆச்சரியப்பட்டது போதும், கவுண்டவுனைப் பார், இன்னும் சில நொடிகளில் விளையாட்டு ஆரம்பித்துவிடும். வாழத் தயாரா?”

நிச்சயமாக.

மூன்று... இரண்டு.... ஒன்று....

வீவீவீவீவீவீவீவீவீவீவீவீவீவீவீவீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

மீண்டும் குழந்தையாக பிறந்தேன்...........


1 comment:

  1. Super super super super
    Ungakitta pesanum
    aravindh raj ondikuppam
    9994623658

    ReplyDelete